Shivraj Singh Chouhan Comments on INDIA Alliance and Rahul Gandhi source:google,thamizhalai
தமிழ்நாடு

"இண்டியா கூட்டணி சிதைந்துவிட்டது" ராகுல் தலைமையை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்!

இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்க விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சனம்.

Kavitha prasanna

Shivraj Singh Chouhan Comments on INDIA Alliance and Rahul Gandhi

சிவராஜ் சிங் சவுகான் கடும் விமர்சனம்

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக உத்தி வகுக்கவும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) குறித்து விவாதிக்கவும் இண்டியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே சிதைந்துவிட்டது

இந்தக் கூட்டத்தை விமர்சித்துப் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இண்டியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் செயல்பட விரும்பவில்லை என்றும், கூட்டம் தொடங்குவதற்கு முன்பே இந்த கூட்டணி சிதைந்துவிட்டது என்றும் சாடியுள்ளார்.

முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவில்லை?

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தக் கூட்டத்தில் நேரில் பங்கேற்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய சிவராஜ் சிங் சவுகான், சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே டெல்லிக்கு வராமல் இணையவழியில் மட்டுமே பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தலைமை குறித்து கேள்வி

சொந்த கட்சியான காங்கிரசே ராகுல் காந்தியை ஒரு தலைவராக அங்கீகரிக்காதபோது, நாட்டின் மக்கள் எவ்வாறு அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்வார்கள் என்று மத்திய அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தேர்தலில் தோற்றுவிட்டால் பிரதமர் மீதும், தேர்தல் நடைமுறைகள் மீதும் பழி போடுவதை எதிர்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஆதரவு

வாக்காளர் பட்டியலில் இறந்தோரின் பெயர்களையும், இரட்டைப் பதிவுகளையும் நீக்குவதில் எந்த தவறும் இல்லை என்றும், நாட்டின் குடிமகனாகவே இல்லாத ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜனநாயகத்தின் அடிப்படையே சரியான வாக்காளர் பட்டியல்தான் என்றும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்தான்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு!

=======