கரூர் கூட்ட நெரிசல் - 41 பேர் பலி
கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக, தமிழக அரசு நியமித்த அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரித்து வந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுகளை எதிர்த்து தவெக தரப்பில் ஆதவ் அர்ஜுனா மற்றும் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அமர்வு இதை விசாரித்தது.
உச்ச நீதிமன்றத்தில் வாதம்
அப்போது, தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம், சி.ஆர்யமா சுந்தரம் ஆகியோரும், தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, பி,வில்சன், அபிஷேக் சிங்வி ஆகியோரும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, டி.எஸ்.நாயுடு, வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசனும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க : "CBI கையில்" கரூர் வழக்கு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு
நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ள விவரங்கள் :
* உயிரிழப்பு சம்பவத்தில் நியாயமான, உண்மையான, பாரபட்சமற்ற, வெளிப்படையான, சுதந்திரமான விசாரணையை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை
* எனவே, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தர விடுகிறோம்
* விசாரணையை கண்காணிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் அடங்கிய கண்காணிப்பு குழுவையும் அமைக்கிறோம்
* சிபிஐ முடிந்த அளவு விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும். கண்காணிப்புக் குழு மற்றும் சிபிஐ அதிகாரிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதர, மூத்த அதிகாரி ஒருவரை நோடல் அதிகாரியாக தமிழக அரசு நியமிக்க வேண்டும்
* அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்
* இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு 8 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்
* தமிழக அரசு தரப்பி்ல் முன்னாள் நீதிபதி தலைமையிலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலும் தனித்தனியாக விசாரணை என்பது தேவையற்றது.
இதுபோன்ற விசாரணைகள் குழப்பத்துக்குத்தான் வழிவகுக்கும்.
* தவெக எதிர் தரப்பாக இல்லாத நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி இந்த வழக்கை கிரிமினல் ரிட் மனுவாக விசாரித்தது குறித்து உயர் நீதிமன்ற பதிவுத்துறை விளக்கம் அளிக்க வேண்டும்.
* தமிழக அரசு நியமித்த ஒருநபர் ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு உடனடியாக கலைக்கப்படுகிறது. அவர்கள் இதுவரை நடத்தி சேகரித்த அனைத்து ஆதாரங்கள், டிஜிட்டல் ஆவணங்களையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
* கரூர் எஸ்.பி. மற்றும் கரூர் டவுன் காவல் ஆய்வாளர் பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளையும் சிபிஐக்கு வழங்கி, சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
=======