அதிமுக கூட்டணி
GK Vasan on NDA Alliance : தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. அன்புமணி தலைமையிலான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் தமாகாவும், களத்தில் உள்ளது.
விஜய் யார் பக்கம்?
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணிக்கு வருமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. பிகார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து இருப்பதால், அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க விஜய் விரும்பவில்லை எனத் தெரிகிறது. பிரசாந்த் கிஷோர் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை பறிகொடுத்து இருப்பது, விஜய்க்கு ஒரு எச்சரிகையாக கூறப்படுகிறது.
தனித்து போட்டி - கரை சேர்க்குமா?
தனித்து போட்டியிட்டு தமிழகத்திலும் வெற்றியை ஈட்டுவது சாத்தியமில்லை. அதிலும் திமுக, அதிமுக கூட்டணி வலுவாக இருக்கும் போது, கட்டமைப்பில் பெரிய வலு இல்லாத தவெக, கூட்டணிக்கு சென்றாலும் மட்டுமே வெற்றிக்கனியை பறிக்க முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால் பிரசாந்த் கிஷோரை போலவே முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் கட்சி தான் தவெக.
எடப்பாடியுடன் ஜி.கே. வாசன்
இந்தச் சூழலில் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில் தமாகா கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
அரசியல் பேசினோம்
பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் “மரியாதை நிமித்தமாகவும் சந்தித்தேன்” என்று அவர் கூறினார். இது NDA கூட்டணியின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. “எது தேவையோ, அவசியமோ அதை மட்டுமே தமாகா பேசும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகரிக்க ஈபிஎஸ்தான் காரணம்” என்று புகழாரம் சூட்டினார்.
மக்களின் எண்ணத்தை அறிந்தவர் எடப்பாடி
இபிஎஸ் 170க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு சென்று மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து வந்துள்ளதாகவும், எனவே NDA கூட்டணி வலிமை பற்றி கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார். “பீகாரை போலவே தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்று வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்
“NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால் மேலும் பல கட்சிகள் வர உள்ளன” என்று உறுதிப்படுத்தினார். இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது. அதிமுக-தமாகா கூட்டணி, திமுகவுக்கு எதிரான மாற்று சக்தியாக உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தமாகா, NDA-வின் முக்கிய கூட்டணி கட்சியாக செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, விஜய் வருவதை தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டு பேசினாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.