சட்டமன்ற தேர்தல்களில் தொடர் தோல்வி : ‘சுமையாக’ மாறிய காங்கிரஸ்!

மக்களவை தேர்தலுக்கு பிறகு நடந்த 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்து இருக்கும் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளுக்கு சுமையாக மாறி விட்டதா என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
Congress suffered crushing defeat in the six state assembly elections, has become a burden on the coalition parties
Congress suffered crushing defeat in the six state assembly elections, has become a burden on the coalition parties
3 min read

மக்களவை தேர்தல் - 2024

2024ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் தேர்தலை சந்தித்த பாரதிய ஜனதா 3வது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இந்தியா கூட்டணி என்ற பெயரில் மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றவும் முடியவில்லை. தமிழகத்தில் மட்டும் அந்தக் கூட்டணி 39 இடங்களையும் வசப்படுத்தியது.

ஆறு மாநில சட்டமன்ற தேர்தல்

மக்களவை தேர்தலுக்கு பிறகு, மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், டெல்லி மற்றும் பீகார் ஆகிய ஆறு முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள், ஆளும் பாஜக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கும் சரியான பாடத்தை கற்றுத் தந்து இருக்கிறது.

ஆட்சியை தக்க வைத்த என்டிஏ

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரா, அரியானா மற்றும் பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் தங்களது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில், பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய ‘மகாயுதி’ கூட்டணி, கடுமையான போட்டிக்கு மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

அதேபோல, பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிரமாண்ட வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அரியானாவில், தனிப்பெரும்பான்மை கிடைக்காத போதிலும், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

ஜார்க்கண்ட்-இந்தியா கூட்டணி ஆட்சி

எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ‘இந்தியா’ கூட்டணியை பொறுத்தமட்டில் ஜார்கண்ட் மாநிலத்தில், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி, பாஜகவின் சவாலை முறியடித்து மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில், உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

டெல்லியில் பாஜக ஆட்சி

தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜகவிடம் வீழ்ந்தது. ஆம் ஆத்மியை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் டெல்லியில் படுதோல்வியை சந்தித்தது.

உள்ளூர் பிரச்சினைகள் ஆதிக்கம்

‘பீகார் போன்ற மாநிலத் தேர்தல் முடிவுகள், தேசிய அளவிலான பிரச்னைகளை விட, உள்ளூர் பிரச்னைகள், மாநிலத் தலைவர்களின் ஆளுமை மற்றும் சாதகமான சாதி சூழல்களே சட்டமன்றத் தேர்தல்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளன. மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை மட்டுமே வைத்து மாநிலங்களில் எளிதாக வென்றுவிட முடியாது என்பதை இந்த முடிவுகள் உணர்த்தியுள்ளன.

கரைந்து போன காங்கிரஸ்

ஆறு மாநிலத் தேர்தல் முடிவுகளும் எந்த ஒரு கூட்டணிக்கும் முழுமையான சாதகமாக அமையவில்லை. சில மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பலத்தை நிரூபித்தாலும், மற்ற சில மாநிலங்களில் ‘இந்தியா’ கூட்டணி புத்துயிர் பெற்றது. ஆனால் ஒன்றில் கூட காங்கிரஸ் தனது பலத்தை காட்டவில்லை.

கூட்டணி கட்சிகளுடன் மோதல்

டெல்லியில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம்ஆத்மியுடன் ஒத்து போகவில்லை. அதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வீழ்ந்தது. பிகாரில் கூட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிடம் காங்கிரஸ் மோதல் போக்கை கடைபிடித்ததால், அந்த கட்சி இந்த தேர்தலில் போட்டியிடவே முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டது.

பிகாரில் வரலாறு காணாத தோல்வி

பிகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியா கூட்டணியில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி, வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரசின் இந்த படுதோல்வி, இந்தியா கூட்டணியின் ஒட்டுமொத்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

சுமையாக மாறிவிட்டதா காங்கிரஸ்?

இந்தத் தோல்வி மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு ‘சுமையாக’ மாறிவிட்டதோ என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார யுக்தி முற்றிலும் தோல்வியடைந்தது. பிகார் வாக்காளர்கள், தங்களின் அன்றாட உள்ளூர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பிய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் தேசிய அளவில், உலக அளவில் உள்ள பிரச்சினைகளையும், ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளையும் மட்டுமே முன்னிறுத்தி மட்டுமே பேசினர்.

எடுபடாத ’வாக்குத் திருட்டு;

ராகுல் காந்தி தனது பிரசாரங்களில், ‘வாக்குகள் திருடப்படுகின்றன’, ‘ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது’ என்று தொடர்ந்து முழங்கியது மக்களிடையே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நலத்திட்ட உதவிகளால் பயனடைந்த மக்கள், ‘நல்லாட்சி’ என்ற வாக்குறுதிக்கே முக்கியத்துவம் அளித்தனர்.

பலவீனமான அமைப்பு - தோல்விக்கு காரணம்

காங்கிரஸ் நடத்திய ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ ஆரம்பத்தில் உற்சாகமாகத் தெரிந்தாலும், பேரணிகளில் கூடிய கூட்டத்தை வாக்குகளாக மாற்றுவதற்குத் தேவையான பூத் அளவிலான தொண்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள் காங்கிரஸிடம் இல்லை. இது அக்கட்சியின் மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்பட்டது. கட்சிக்குள் நிலவிய கோஷ்டி பூசல்களும், சீட்டுப் பங்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளும் தோல்வியை உறுதி செய்தன.

ஆர்ஜேடியை காலி செய்த காங்கிரஸ்

மூத்த தலைவர்கள் தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கிக்கொண்டதோடு, பிரசாரத்தை முடக்கும் செயல்களிலும் ஈடுபட்டதாக தெரிகிறது. உட்கட்சிப் பூசல், கட்சியின் களப்பணியை வெகுவாகப் பாதித்ததோடு, ஆட்சிக்கு வர வேண்டிய ஆர்ஜேடியின் கனவையும் தகர்த்து விட்டது.

இந்தியா கூட்டணியில் தெளிவான ஒருங்கிணைப்பு இல்லாததால், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளே ஒருவரையொருவர் எதிர்த்து ‘நட்பு ரீதியாக’ போட்டியிட்டன.

கேள்விக்குறியான காங்கிரஸ் எதிர்காலம்!

இந்தத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. மாநிலத் தேர்தல்களில் அதன் பலவீனமான செயல்பாடு, கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி கூட, ‘கூட்டணிகளுக்கு காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி’, பெரிய சுமை என்று விமர்சித்து, எச்சரிக்கையும் விடுத்து இருந்தார்.

களப்பணியில் வலுவாக இருக்கும் பாஜக

மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கா விட்டாலும், உடனடியாக சுதாரித்து கொண்ட அந்தக் கட்சி, மாநிலத் தேர்தல்களில் தனது இருப்பை தக்க வைத்து செயல்பட்டது. இதன் காரணமாக 6 மாநில தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது. கட்சியின் உட்கட்டமைப்பு திறனும், களப்பணியாளர்களுமே பாஜகவின் மிகப்பெரிய பலம். அடுத்து நடைபெறவுள்ள தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தலுக்கும் இப்போதே பாஜக தயாராக, அதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in