சட்டமன்ற தேர்தல் 2025 :
TVK Vijay Election Campaign Date 2025 : தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் 8 மாதங்களை இருப்பதால், பல்வேறு அரசியல் கட்சிகள் சுற்றுப் பயணம் என்ற பெயரில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், தமிழகம் முழுவதும் 8 மாதங்களுக்கு தேர்தல் திருவிழா களைகட்டி இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் :
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில், அரசியல் கட்சியை தொடங்கினார். விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டு(TVK First Manadu) வெற்றிகரமாக நடத்தி, தமிழக அரசியல் கட்சிகளை அவர் மிரள வைத்தார்.
முழுவீச்சில் களமிறங்கும் விஜய் :
இதைத்தொடர்ந்து, பொதுக்குழு, செயற்குழு, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை, பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம், மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை என தமிழக வெற்றிக் கழகம் முழு மூச்சில் களமிறங்கி இருக்கிறது.
பாஜக, திமுகவை எதிர்க்கும் விஜய் :
மதுரையில் கடந்த மாதம் 2வது மாநில மாநாட்டை நடத்திய விஜய், கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என ஆவேசமாக பேசி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். தனது தலைமையில் தான் கூட்டணி என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
ஸ்ரீரங்கத்தில் முதல் பிரசாரம்? :
மக்கள் பிரச்சினைகளுக்கு அறிக்கை மட்டுமே கொடுக்கும் விஜய், அவர்களை சந்திப்பதை தவிர்ப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செப்டம்பர் மாதம் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. செப்டம்பர் 17ம் தேதி தனது கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான பெரியார் பிறந்த ஈரோட்டில் விஜய் முதல் பிரசாரத்தை தொடங்குவார் என கூறப்பட்டது.
ஜெயலலிதா தொகுதியில் விஜய்! :
அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வரும் 13ம் தேதி திருச்சி அருகேயுள்ள ஸ்ரீரங்கத்தில் விஜய் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக(TVK Vijay Campaign Date in Srirangam) தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி தான் ஸ்ரீரங்கம். கோவிலின் முன்பு பிரசாரத்தை தொடங்கும் விஜய், மற்றொரு இடத்தில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார் எனத் தெரிகிறது. இன்று அல்லது நாளை இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க : பெரியார் பிறந்தநாளில் விஜய் சுற்றுப்பயணம் : மக்களை சந்திக்கிறார்.!
சென்டிமெண்ட் பிரசாரம், விஜய் வியூகம் :
காவல்துறையினர் அனுமதி கிடைத்ததும் விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் இடம் இறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில், திருச்சியில் இருந்து அவரது முதற்கட்ட பிரசார பயணம் அமையும். சென்டிமெண்டாக ஜெயலலிதா தொகுதியில் இருந்து பிரசாரம் மேற்கொள்ளும் விஜய், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பாரா? பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
====================