நாடகம் ஆடுவது திமுகவின் வாடிக்கை
தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், “இந்தியாவில் நாங்கள்தான் அதை முதலில் யோசித்தோம் என்று பெருமையாகச் சொல்லும் திமுகவின் நேக் என்ன என்று சொல்லட்டுமா?
இதுபோன்ற பெரிய பெரிய திட்டங்களையெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் செய்ய மாட்டார்கள். ஆட்சி முடியும்போது அதற்கான திட்டத்தைக் கொண்டு வருவார்கள்.
அதன்பின் தேர்தல் வரும், அதில் தோற்றுவிட்டு எங்கள் ஆட்சி முடிந்துவிட்டதே என்று நாடகம் ஆடுவார்கள்.
மக்கள் மீது அக்கறை இருக்கா?
மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது தானே. அதென்ன ஆட்சி முடியும்போது அடிக்கல் நாட்டுவது?
தவெக ஆட்சி அமைந்ததும் பெரிய பெரிய திட்டங்களை உடனே தொடங்குவோம். ஐந்து ஆண்டுகளுக்குள் அதை முழுமையாக நிறைவு செய்யவும் முயல்வோம்.
எனக்கும் எல்லாம் தெரியும்
இப்படியெல்லாம் நாம் பேசினால், காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு விவகாரங்களில் உன் கருத்து என்ன? அவற்றைப் பற்றி உனக்குத் தெரியுமா என்று கேட்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஐயா உலக மகா மேதைகளே ROV - Remotely Operated Vehicle-ல் தண்ணீருக்குள்ளேயே சென்று அணைகளின் உறுதித் தண்மையை ஆராய்ந்து பார்ப்பது வரை நானும் அனைத்தையும் தெரிந்துதான் வைத்திருக்கிறேன்.
மீனவர்கள் மீது கைவைக்க விடமாட்டேன்
கடல் விவசாயிகளான மீனவர்களின் பிரச்னைகளுக்கு அவ்வப்போது எழுந்து கடிதம் எழுதிவிட்டுத் தூங்கப் போய்விடுவார்.
அதன்பின் அது அப்படியே இருக்கும். மானே, தேனே, பொன்மானே என்று கடிதம் எழுதுவதெல்லாம் வேலைக்கே ஆகாது.
மத்திய அரசுக்கு உண்மையான, உணர்வுப்பூர்வமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். நம் மீனவர்கள் மீது யாரையும் கையே வைக்க விடக் கூடாது.
அவர்களுக்கான பாதுகாப்பு பக்காவாக இருக்க வேண்டும்.
அதுதான் நமது ஒரே குறிக்கோள். மீனவர்களே, அடுத்து நமது ஆட்சிதான். கவலைப்படாதீர்கள். உங்களுக்கான பாதுகாப்பு பக்காவாக இருக்கும்.
திமுக 2வது முறை ஆட்சிக்கு வராது
அடுத்து நாங்கள்தான் என்று ஸ்டாலின் சார் சொல்லுவார். அதெல்லாம் நடக்காது. சீனப்பெருஞ்சுவரின் நீளத்தை விடப் பெரிய விஷயம் இரண்டாவது முறை திமுக ஆட்சிக்கு வருவது. அவர் அப்பாவான கருணாநிதியாலேயே முடியவில்லை.
அரசியலுக்கு வந்தால் கலெக்ஷன் பார்க்கலாம் என்பது உண்மையான அரசியல் கிடையாது.
இது நமக்குத் தெரியும். அதனால்தான் நம்மைச் சுற்றி அத்தனை சதிகள், அதில் முக்கியமான சதி என்ன தெரியுமா?
ஒண்ணு நீ, இல்லேன்னா நான் ( திமுக, அதிமுக )
”இதோ பாரு, ஒண்ணு நீ, இன்னோன்னு நா. நா இல்லைன்னா நீ, நீ இல்லைனா நா, நமக்குள்ள வேற யாரும் வந்துட கூடாது. நம்ம ரெண்டு பேரால மட்டும்தான் மக்கள ஈஸியா ஏமாத்த முடியும். விஜய் வந்ததால நமக்கு பொழப்பே போச்சு.
மக்கள் வேற அவனத்தான் நம்புறாங்க. நாம வெளிய அடிச்சுக்குற மாதிரி அடிச்சுக்கிட்டாலும் உள்ள நம்ம டீலிங் பக்காவா இருக்கணும். மக்களோட ஃபீலிங்க்ஸ் நமக்கு முக்கியமில்ல.
நமக்கு டீலிங் தான் முக்கியம். மாத்தி மாத்தி ஆட்சிக்கு வந்துர்லாம்னு நெனைச்சா அது நடக்காது போல இருக்கே!
என்னை தடுக்க திமுக, அதிமுக கூட்டு
அதுனால் நீ என்ன பண்ற, எஸ்.ஓ.பி போட்டு அவன தடுத்துரு, அவன் மேல பழி மேல பழி போட்டு நா அவன தடுத்துடுறேன். டீலிங் ஓகேவா?” என்று பேசிக்கொள்கிறார்கள்.
உண்மையிலேயே இப்படித்தான் இருக்கிறது அவர்கள் டீலிங் எல்லாம். சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
பழி மேல் பழி போட்டு, கரூரில் தொடங்கி, ஜனநாயகன் வெளியீடு வரை செய்தார்கள்.
ஆனால் ஜனநாயகன் வெளியீட்டிற்கு நிறைய பேர் குரல் கொடுத்தார்கள். குறிப்பாக நம் முதலமைச்சர் பூசி, மெழுகி, பட்டும் படாமல் குரல் கொடுத்தார்.
விஜயால் தூக்கம் போச்சு
நாம் வெளிப்படையாகப் பேசுவதால் சி.எம். சாரின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் தெரியுமா? ஏற்கெனவே கட்சிக்காரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை.
தூங்க விடமாட்டேன் என்கிறார்கள். விஜய் வேறு தூங்க விடமாட்டேன் என்கிறான்.
நாம் நெடுஞ்சாலையில் சைக்கிளில் தனியாகப் போகலாம் என்று நினைத்தோம். விஜய் மக்கள் சக்தியோடு வந்து தானும் கேள்வி கேட்டு, மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறான்.
ரூ. 1000 கொடுத்துக் கொண்டிருந்தோம். ரூ. 5000 கொடுத்து ஏமாற்றலாம் என்றால் அதற்கும் கேள்வி கேட்க வைக்கிறான்.
விண்ணை முட்டும் விசில் சத்தம்
விசில் சத்தம் விண்ணை முட்டுகிறது. கூட்டணிக் கட்சிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. விஜயின் பிரசாரத்தையாவது முடக்கலாம் என்று பார்த்தால் அப்போதும் மக்கள் அவன் பின்னால் நிற்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய்
அந்த மனநிலையில்தான் அவர் இருப்பார். இந்த விஜயை முடக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒவ்வொரு விஜயையும் உங்களால் முடக்க முடியாது.
ஒரு ஊர்ல உங்கள் அப்பாவுக்கு வெண்கல சிலை வைக்க திட்டமிட்டதற்கு உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது? மக்கள் பணத்தில் யாருக்குப் புகழ் பாடப் பார்க்கிறீர்கள் என்று கேட்டார்கள் அல்லவா!
அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டுக்கு இனிப்பு செய்யாதீர்கள் என்று அர்த்தம்.
மேலும் படிக்க: ”ஓம் சக்தி பராசக்தி, திமுக தீயசக்தி” : எலக்சன் இல்லை, எமோஷன், விவசாயியாக பிறக்க ஆசை : தஞ்சையில் விஜய்!
சிலை வைக்க மட்டும் பணம் இருக்கா?
மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்னையைச் சொன்னால் நிதிச்சுமை நிதிச்சுமை என்று சொல்கிறீர்கள். சிலை வைப்பதற்கு மட்டும் எங்கிருந்து பணம் வருகிறது?
முதலில் மக்கள் சோற்றுக்கு வழியைப் பாருங்கள். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானிமாக ரூ. 1000 தருகிறேன் என்று சொன்னீர்களே, என்னாச்சு? கரும்புக்கு ஆதார விலையாக ரூ. 4,000 தருவதாகச் சொன்னது என்னாச்சு?
பெண்களுக்கு அரசு வேலை எங்கே?
ரொம்ப நாள் கல்யாணமே ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு, கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை தருவதாகச் சொன்னீர்களே, என்னாச்சு? இதெல்லாம் சாம்பிள்தான்.
முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. மாநில அரசால் முடியவே முடியாது என்று தெரிந்துகொண்டு, நாங்கள் வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என்றீர்களே. ஆஹா எவ்வளவு பேரிய மோசடி இது. கேட்டால் நாங்கள் முன்மாதிரி ஆட்சி என்பார்கள். இது மோசடி ஆட்சி.
திருநெல்வேலியில் நாங்குநேரியில் சமீபத்தில் சம்பவம் ஒன்று நடந்தது. அதைப்பற்றி நண்பர் ஒருவர் ட்வீட் போட்டிருந்தார். “ஸ்டாலின் தொடரட்டும். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்” என்று பதிவிட்டிருந்தார். இதுதான் அந்தப் பிரச்னைக்கு ஒரே வரியில் கருத்து” என்று விஜய் பேசினார்.
===========