Waterlogging in Villupuram Bus Stand Inside Poonthottam Lake Acquisition By DMK Government image coutesy- vilupuram bus stand- google
தமிழ்நாடு

கால் நூற்றாண்டாக ஏரிக்குள் பேருந்து நிலையம் : அரசின் அலட்சியம்!

திமுக ஆட்சி காலத்தில் ஏரிக்குள் கட்டப்பட்டு, கலைஞர் கருணாநிதியில் திறக்கப்பட்ட விழுப்புரம் பேருந்து நிலையம் கால் நூற்றாண்டு காலமாக, தண்ணீரால் நிரம்பி வழிந்து மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.

Bala Murugan

பூந்தோட்ட ஏரி வரலாறு

Waterlogging in Villupuram Bus Stand : விழுப்புரத்தின் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூந்தோட்டம் ஏரி இருந்தது. 118.54 ஏக்கர் பரப்பளவை கொண்டிருந்த, இந்த ஏரிக்கு தென் பெண்ணையாற்றில் இருந்து கோலியனூரான் பாசன கால்வாய் வழியாக நீர் வரத்து இருந்தது.

ஏரியை கையகப்படுத்திய திமுக அரசு

28 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், பூந்தோட்டம் ஏரி நிரம்பி, தண்ணீர் வெளியேறியது. இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆனாலும், நீர்வரத்து இல்லாத ஏரி என அப்போதைய திமுக அரசு முடிவு செய்து, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுலவகங்கள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகளைக் கொண்ட பெருந்திட்ட வளாகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க திட்டமிட்டு தமிழக அரசு இந்த பூந்தோட்ட ஏரியை கையகப்படுத்தியது.

பூந்தோட்ட ஏரி பேருந்து நிலையமாக மாற்றம்

பூந்தோட்டம் ஏரி(Poonthottam Lake) நிரம்பி வழிந்த சுமார் 3 ஆண்டுகளில், அந்த ஏரி அழிக்கப்பட்டு, அப்பகுதியில் பெருந்திட்ட வளாகம் உருவானது. ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், நீதிமன்றம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களுடன் புதிய பேருந்து நிலையமும்(Villupuram New Bus Stand) உருவானது. இதனை, அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி, 2000வது ஆண்டு திறந்து வைத்து நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

தண்ணீரால் நிரம்பும் பேருந்து நிலையம்

ஏரியை அழித்து, இப்படி ஒரு பேருந்து நிலையம் அமைத்ததை அடுத்து சிறிய மழை பெய்தால் கூட அந்த மழைக்கு இைரையாகுகிறது, இந்த பேருந்து நிலையம். அதாவது, மழை பெய்த மறுகணமே அங்கு நீர் சூழ்ந்து, பேருந்து நிலையமே கடல்போல் காட்சி அளிக்கிறது. அரை மணி நேர மழைக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாத இந்த பேருந்து நிலையத்தால், பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஏரிபோல் காட்சியளிக்கும் பேருந்து நிலையம்

இந்நிலையில், விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் புதிய பேருந்து நிலையம் வழக்கம்போல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தண்ணீர் தேங்கி விடக்கூடாது என்பதற்காக அனைத்து நீர் வழி பாதையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், புதிய பேருந்து நிலையத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது,

கப்பலை போலச் செல்லும் பேருந்துகள்

இதையடுத்து பேருந்துகள் அனைத்தும் தண்ணீருக்குள் கப்பல் போல் சென்று வந்து கொண்டிருக்கிறது. மழைநீருடன், பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீரும் கலந்ததால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பேருந்து நிலையம் உள்ளே செல்ல மக்கள் முன்வரவில்லை. நுழைவு வாயிலில் காத்திருந்து, வெளியே வந்த பேருந்துகளில் ஏறி பயணித்தனர். இதன் காரணமாக, நேற்று காலை 11 மணி வரை நுழைவு வாயிலில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. பின்னர், காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்தனர்.

பொதுமக்கள் கருத்து

இது குறித்து விழுப்புர பொதுமக்களும், பயணிகளும் , “பூந்தோட்ட ஏரியை அழித்து பேருந்து நிலையத்தை கொண்டு வந்து, எங்களை கஷ்டப் படுத்து கின்றனர். ‘திமுக ஆட்சியில் ஒரு குடையின் கீழ் பெருந்திட்ட வளாகம் கொண்டு வரப்பட்டது’ என முன்னாள் அமைச்சர் பொன்முடி பெருமையுடன் பேசி வருகிறார். ஆனால், ஏரியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, அவருக்கு வழி தெரியவில்லை, திமுக எம்ஏல்வு முதல் மாவட்ட ஆட்சியாளர் வரை வெறும் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து சென்று விடுகின்றனர். ஆனால், பேருந்து நிலையத்திற்க்குள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாவது பொதுமக்களாகிய நாங்கள் தான் என்றும் இதற்கு ஒரு நிரந்தர முடிவு எடுத்து எங்களுக்கு போக்குவரத்தை எளிதாக்கி பேருந்து நிலையத்தினை நிரந்தராமாக சரி செய்தோ அல்லது வேறு ஒரு பேருந்து நிலையத்தை அமைத்து தரும்படி பொதுமக்கள் கவலையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர் அவதி

ஃபெஞ்சல் புயலி்ன்போது ஒரு வாரத்துக்கு பேருந்து நிலையம் முடங்கியது. அதன்பிறகும் அதிகாரிகள் பழைய வழி பாதையை தேட முன்வரவில்லை. பூந்தோட்ட ஏரியில் இருந்து மருதூர் ஏரியை நோக்கி வெளியேறும் பாசன கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்டெடுத்தால் மட்டுமே தீர்வு காண முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : TN Rain : தீவிரம் அடைந்த பருவமழை : வேகமாக நிரம்பும் அணைகள், ஏரிகள்

விழுப்புரம் ஆட்சியர் கருத்து

பேருந்து நிலையத்தை மேற்பார்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் “புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி இருப்பதை நேரில் ஆய்வு செய்துள்ளேன். ஓரே நாளில் 17 செ.மீ மழை பெய்துள்ளதால், தண்ணீர் தேங்கி இருக்கிறது என்றார். மேலும், 100 குதிரை திறன் மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது கூடுதலாக ஒரு மோட்டாரை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மழையின் தாக்கமும் குறைந்து ள்ளது. விரைவாக தண்ணீர் வெளியேற்றப்படும் என்று கூறினார். மழை பொழிவு குறைந்ததால், புதிய பேருந்து நிலையம் நேற்று மாலை சற்று இயல்பு நிலைக்கு திரும்பினாலும், தொடர் மழை காலத்தில் மீண்டும் அரை மணி நேரத்தில் கூட அது ஏரியாக மாறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.