தீபத் திருநாளாம் தீபாவளி :
Diwali Festival 2025 As State Holiday in California : தீபத் திருநாளாம் தீபாவளி, இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியமான ஒன்றாகும். நமது அண்டை நாடுகளான நேபாளம், இலங்கையிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம்
அமெரிக்காவிலும் இந்திய வம்சாவளியினர், வேலை தேடிச் சென்று அங்கு தங்கி இருக்கும் இந்தியர்கள் என லட்சக் கணக்கானோர் ஆண்டுதோறும் தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர். அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
லட்சக் கணக்கான இந்தியர்கள் இந்தப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் வகையில், 2024ம் ஆண்டு பென்சில்வேனியா ( Pennsylvania ) மாகாணத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு, அது பின்பற்றப்பட்டு வருகிறது. இதேபோன்று, கனெக்டிகட் ( Connecticut ) மாகாணத்திலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் தீபாவளிக்கு அரசு முறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கலிபோர்னியாவிலும் தீபாவளி விடுமுறை
அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாக கலிபோர்னியாவிலும் தீபாவளிக்கு அரசு விடுமுறை விடும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. இதற்கான ஆணையில், ஆளுநர் கேவின் நியூசம் கையெழுத்திட்டார். இதன் மூலம், பொதுப் பள்ளிகள் மற்றும் சமூகக் கல்லூரிகள் தீபாவளி அன்று விடுமுறை விடலாம்(California Diwali State Holiday). மேலும், அரசு ஊழியர்கள் இந்த பண்டிகையை கொண்டாட ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இந்த சட்டம் இரு கட்சி ஆதரவுடனும், மக்களிடையே நடந்த தொடர் முயற்சிகளாலும் நிறைவேறியுள்ளது.
மேலும் படிக்க : மத்திய அரசு ஊழியர்களுக்கு ”தீபாவளி பரிசு” : அகவிலைப்படி 3% உயர்வு
அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி
இதன்மூலம் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் தீபாவளியை மாகாண விடுமுறையாக அங்கீகரிக்கும் முதல் மாகாணமாக மாற்றியுள்ளது கலிபோர்னியா. முக்கியமான இந்தச் சட்டத்தை நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோர் முக்கிய பங்காற்றினர். கோயலிஷன் ஆஃப் ஹிந்துஸ் ஆஃப் நார்த் அமெரிக்கா போன்ற இந்து அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன. கலிபோர்னியா மாகாண அரசின் இந்த உத்தரவு, அங்கு வசிக்கும் இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
===================