கொசுக்கள் இல்லாத அண்டார்டிகா, ஐஸ்லாந்து
Mosquito Found in Iceland for First Time : உலகில் கொசுக்கள் இல்லாத நாடுகளே இல்லை என்பது தான் உண்மை. எங்கெல்லாம் தண்ணீர் தேங்குகிறதோ, அந்த இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி விடும். அதேசமயம், பூமியில் கொசுக்களே இல்லாத இடங்களாக அண்டார்டிகா மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை இருந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் அப்பகுதிகளில் காணப்படும் அதிக குளிர், நீர்நிலைகளும் உறைந்து போய் இருப்பது தான்.
ஐஸ்லாந்தில் கொசுக்கள்
இந்த நிலையில் ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்காவிக் நகரின் தென்மேற்கில் உள்ள பனிப்பாறை பள்ளத்தாக்கான க்ஜோஸில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன(Mosquito Found in Iceland). உள்ளூர் பூச்சியியல் வல்லுநரான பிஜோர்ன் ஹ்ஜால்டசன் என்பவர் நடத்திய ஆய்வில் இரண்டு பெண் கொசுக்கள் மற்றும் ஒரு ஆண் கொசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொசுக்கள் குளிர்காலத்திலும் வெற்றிகரமாக உயிர்வாழக்கூடிய குலிசெட்டா அன்லுலாட்டா இனத்தை சேர்ந்தவை என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
புவி வெப்பமயமாதல் - கொசுக்கள் உற்பத்தி
புவி வெப்பமயமாதல் எதிரொலியாக ஐஸ்லாந்தில் இந்த ஆண்டு மே மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவானது. 26.6 சென்டி கிரேட் என்ற அளவில் பதிவான வெப்பம் காரணமாகவே கொசுக்கள் உற்பத்தியாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன்காரணமாக பூமியில் கொசுக்கள் இல்லாத பகுதியாக நீண்ட காலமாக அறியப்பட்டு வந்த ஐஸ்லாந்து, அந்த தனித்துவத்தை இழந்துள்ளது. ஐஸ்லாந்தை தவிர்த்து கொசுக்கள் இல்லாத இன்னொரு பகுதி என்றால் அது அன்டார்டிக்கா கண்டமாக அறியப்படுகிறது.
மேலும் படிக்க : Universal Kidney: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்
ஆய்வாளர்கள் தீவிர ஆராய்ச்சி
“பொதுவாகக் கொசுக்கள் கப்பல்கள், அதில் வரும் கன்டெய்னர்கள் மூலம் பிறநாடுகளுக்குப் பரவும். அதனால் துறைமுகப் பகுதியில் தென்பட்டால் வெளிநாட்டிலிருந்து வந்ததாகச் சொல்லலாம். ஆனால், இந்த கொசுக்கள் ஐஸ்லாந்தின் ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் இருந்துள்ளன. எனவே, அவை எண்ணிக்கையில் அதிகமாக ஐஸ்லாந்தில் இருக்கலாம்” என்கின்றர் ஒருசில ஆய்வாளர்கள். கொசுக்கள் எப்படி ஐஸ்லாந்தின் உட்பகுதிக்குள் வந்தன என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
===================