
மருத்துவத்துறையில் புதிய புரட்சி
Universal Kidney To Transplant All Blood Group : சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பலரின் உயிரைக் காப்பாற்றும் அதிசய மருத்துவ முறையாக என்றாலும், இரத்த வகை பொருத்தமின்மை காரணமாக நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த சிக்கலை தீர்க்கும் வகையில், உலக அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Universal Kidney
இதில், கனடா மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் குழு முதல் வெற்றி படியை எட்டி இருக்கிறது. அதன்படி ஆய்வகத்தில் 'Universal Kidney' உருவாக்கப்பட்டு உள்ளது. ஓ வகை (O type) இரத்தம் கொண்ட நோயாளிகள் மட்டும் அல்லாமல், அனைத்து இரத்த வகையினரும் எந்த நன்கொடையாளரிடமிருந்தும் சிறுநீரகத்தைப் பெற்று பொருத்தலாம்.
தற்போது, ஓ ரத்த வகை நோயாளிகள் அதே வகை சிறுநீரகத்திற்காக வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம், இந்தக் குறை முற்றிலுமாக சீர்செய்யப்பட்டு விடும்.
A வகை இரத்த சிறுநீரகத்தில் காணப்படும் சர்க்கரை மூலக்கூறு ஆன்டிஜென்களை (A antigens) விசேஷ நொதிகள் (enzymes) மூலம் வெட்டி ஆராய்ச்சியாளர்கள் அகற்றினர். இதனால், அந்த சிறுநீரகம் வகை O மாதிரி ஆனது.
மாற்று சிகிச்சை சாத்தியமானது
மூளைச்சாவு அடைந்த நோயாளியின் உடலில் இந்த மாற்றியமைக்கப்பட்ட சிறுநீரகம் பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. முதல் சில நாட்கள் சிறப்பாக செயல்பட்டது.மூன்றாம் நாளில் மீண்டும் சிறிய அளவில் வகை A ஆன்டிஜென்கள் தோன்றினாலும், நிராகரிப்பு அளவு மிகக் குறைவாக இருந்ததால், இதுவே மாற்று அறுவை சிகிச்சைக்கு சாத்தியமான பாதை என்பதை தெளிவாக்கியது.
எல்லாருக்கும் பொருந்தும் சிறுநீரகம்
அமெரிக்காவில் மட்டும் தினமும் 11 பேர் சிறுநீரகத்துக்காக காத்திருந்து உயிரிழப்பதாக கூறப்படுகிறது. பலர் O வகை சிறுநீரகத்திற்காக ஆண்டுகள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கண்டுபிடிப்பு, காத்திருப்பு நேரத்தை குறைக்கும். எல்லாருக்கும் பொருந்தும் சிறுநீரக வாய்ப்பை உருவாக்கும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பற்றப்படும்.
மேலும் படிக்க : மருத்துவ உலகில் புரட்சி : செயற்கையாக இதயம், கல்லீரல் உருவாக்கம்
உறுப்பு தான காத்திருப்பு இருக்காது
இன்னும் மனிதர்களில் முழுமையான சோதனைகள் தேவைப்படுகிறது. இப்போது கிடைத்துள்ள முடிவுகள் மருத்துவ உலகில் ஒரு பெரும் வரலாற்று மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு சிறுநீரக மாற்று மருத்துவத்தில், “உறுப்பு தானம் காத்திருப்பு” என்ற பெயரையே நீக்கி விடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
====================