US Court on Donald Trump Birthright Citizenship Executive Order in Tamil 
உலகம்

டிரம்பின் ’பிறப்பால் குடியுரிமை’ ரத்து : தடை விதித்த நீதிமன்றம்

US Court on Donald Trump Birthright Citizenship Executive Order : அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமையை கட்டுப்படுத்தும் அதிபர் டிரம்பின் நிர்வாக உத்தரவுக்கு, நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Kannan

அமெரிக்கா குடியுரிமை :

US Court on Donald Trump's Birth Right Citizenship in America : அமெரிக்காவில் பிறப்புரிமை மூலம் இரண்டு வழிகளில் குடியுரிமை பெறலாம். ஒரு நபர் அமெரிக்க எல்லைக்குள் அதன் அதிகார வரம்பிற்குள் பிறப்பதன் மூலம் அல்லது அந்த நபர் பிறந்த நேரத்தில் அவர்களின் பெற்றோரில் ஒருவராவது அமெரிக்க குடிமகனாக இருப்பதன் மூலம் பிறப்புரிமை குடியுரிமை கிடைக்கும். அமெரிக்க கூட்டாட்சி அரசின் சட்டப்பூர்வ "அதிகார வரம்பின்" கீழ் பிறந்த எவருக்கும் பிறப்புரிமை குடியுரிமை வெளிப்படையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

குடியுரிமைக்கு உத்தரவாதம்

அதன்படி, அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்ற அனைத்து நபர்களும், அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்களும், அமெரிக்காவின் குடிமக்களும், அவர்கள் வசிக்கும் மாகாணத்தின் குடிமக்களாக கருதப்படுவார்கள். இந்த உரிமையை யாரும் பறிக்க முடியாது.

குடியுரிமை மறுப்பு - டிரம்ப் உத்தரவு

அமெரிக்க அதிபராக 2வது முறை பொறுப்பேற்றதில் இருந்து, குடியேற்ற சட்டம், விசா கெடுபிடிகளில் பிடிவாதமாக இருக்கிறார் டொனால்டு டிரம்ப். அந்த வகையில், ஆவணமற்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கும் உத்தரவினை அவர் பிறப்பித்தார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக அல்லது தற்காலிகமாக தங்கி இருப்பவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை தர முடியாது என்ற நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்து இட்டிருந்தார். இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால், ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் நாடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள் என்ற அச்சத்தை, வல்லுநர்கள் வெளிப்படுத்தினர்.

டிரம்பிற்கு எதிராக பாய்ந்த வழக்குகள்

அதிபர் டிரம்பிற்கு உத்தரவை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்திற்கு எதிரானது என விமர்சிக்கப்பட்டு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தில் கிளாஸ் ஆக்சன் (Class Action) வழக்கு மூலம், பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் சார்பாக வாதிடப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜோசப் லாபிளாண்ட், ட்ரம்பின் உத்தரவு அரசியலமைப்பிற்கு முரணானது எனக் கூறி, அதை நாடு முழுவதும் தடை செய்து உத்தரவிட்டார். அதேசமயம், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மேல்முறையீடு செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பிறப்பால் குடியுரிமை: வரலாற்று முக்கியத்துவம்

பிறப்பால் குடியுரிமை (Birthright Citizenship) என்பது அமெரிக்காவில் பிறந்தவர்களுக்கு தானாகவே குடியுரிமை வழங்கும் அரசியலமைப்பு உரிமை. 1868ல், அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின், முன்னாள் அடிமைகளாக இருந்த ஆப்ரோ-அமெரிக்கர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக 14-வது திருத்தம் இயற்றப்பட்டது.

மேலும் படிக்க : காசாவில் ஓய்ந்த குண்டு சத்தம் : டிரம்பின் முயற்சி, மோடி பாராட்டு

இந்தச் சட்டம் "அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியேறி, அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து நபர்களும், அமெரிக்காவின் குடிமக்களாகவும், அவர்கள் வசிக்கும் மாநிலத்தின்(US Birthright Citizenship) குடிமக்களாகவும் இருப்பார்கள் என்பதை வரையறுத்து கூறுகிறது.

==========