எத்தனால் திட்டம்: ரூ.1.66 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வரவு: ரூ.1.97 லட்சம் கோடி அந்நிய செலாவணி சேமிப்பு : மத்திய அரசு.!

எத்தனால் கலப்பு பெட்ரோல் மூலம், இந்தியாவும், விவசாயிகளும் அடைந்து இருக்கும் பயன்களை பட்டியலிட்டு இருக்கிறது மத்திய அரசு.
Central Government listed benefits  India and farmers gained from ethanol-blended petrol
Central Government listed benefits India and farmers gained from ethanol-blended petrolgoogle
2 min read

எத்தனால் கலப்பு பெட்ரோல்

இதுகுறித்து, மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.

20 ஆண்டு கால பயணம்

எத்தனால் கொள்கை என்பது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல, இது கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட பயணமாகும்.

2001ம் ஆண்டு எத்தனால் கலப்புக்கான முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு, 2004ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

2006ல் 5 சதவீதம் கலப்பு

பின்னர் 2006ல் ஐந்து சதவீத எத்தனால் கலப்பு பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கரும்பு மூலம் மட்டுமே போதிய எத்தனால் உற்பத்தி செய்ய முடியாத சூழல் நிலவியதால், 2014 வரை கலப்பு அளவு 1.5 சதவீதமாகவே இருந்தது.

எத்தனால் உற்பத்தி அதிகரிப்பு

2018ம் ஆண்டு தேசிய உயிரி எரிபொருள் கொள்கை மூலம் சோளம், உபரி தானியங்கள் போன்றவற்றிலிருந்தும் எத்தனால் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் உற்பத்தி அதிகரித்தது.

2026ல் 20% எத்தனால்

2021ல் நிதி ஆயோக் இதற்கான விரிவான வழிகாட்டுதலை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, எத்தனால் விநியோகம் 2020-21-ல் 8.1 சதவீதத்தில் இருந்து, 2025-26 காலக்கட்டத்தில் 20 சதவீத இலக்கை எட்டியுள்ளது.

வாகனங்களுக்கு பாதிப்பில்லை

வாகனங்களின் இயக்கத்தன்மை குறித்து எழும் சந்தேகங்களுக்கு அறிவியல் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

வாகனத் தயாரிப்பாளர்களுடன் விரிவான ஆலோசனைகள் நடத்திய பிறகே இருபது சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டது.

என்ஜின் ஆயுள், ரப்பர் பாகங்கள், உமிழ்வு அளவுகள் ஆகியவை பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. எத்தனால் கலந்த எரிபொருள் என்ஜின் எரிதிறனை மேம்படுத்துகிறது.

கார்பன் உமிழ்வு 40% குறைப்பு

மேலும் இது கார்பன் உமிழ்வை நாற்பது சதவீதம் வரை குறைக்கிறது. இந்த பெட்ரோல் பழைய வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் தவறானது என மத்திய அரசு தெரிவித்துள்ள,

விவசாயிகளுக்கு பயன்

விவசாயிகளுக்கு எத்தனாலுக்கான நியாயமான விலை கிடைப்பதை அரசு உறுதி செய்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயரும்போது மட்டுமே எத்தனால் மலிவான மாற்று எரிபொருளாக அமையும்.

இந்திய நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு

இருப்பினும், எத்தனால் கலப்பால் நாட்டின் எரிபொருள் தேவையில் இருபது சதவீதம் உள்நாட்டிலேயே பூர்த்தியாவதால், உலகளாவிய விலை ஏற்றங்கள், போர்கள் அல்லது கப்பல் போக்குவரத்துத் தடைபடுவதால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து இந்தியா பாதுகாக்கப்படுகிறது.

பெட்ரோல் விலை உயர்வு தவிர்ப்பு

2022 ஜூன் முதல் 2026 ஜூன் வரையிலான காலத்தில் அண்டை நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல் விலை பெருமளவு உயர்ந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல் விலை வெறும் 5.58 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது.

அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே எத்தனால் கலப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் தற்சார்பு மற்றும் நிலையான, எரிசக்தி பாதுகாப்பைக் கொண்ட எதிர்காலத்திற்கான முக்கியப் படியாகும்.

அந்நிய செலாவணி சேமிப்பு

இதன் மூலம் 1.97 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. சுமார் 316 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி தவிர்க்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.1.66 லட்சம் கோடி

952 லட்சம் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது. 1.66 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக மட்டுமின்றி, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பங்களிப்பவர்களாகவும் மாறியுள்ளனர்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in