

E85 எரிபொருள் விற்பனை தொடக்கம்
E85 is a high-ethanol fuel blend consisting of 85% ethanol and 15% petroleum : இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் எரிபொருள் துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'E85 எரிபொருள்' (E85 Fuel) விற்பனை, டெல்லியில் தொடங்கியுள்ளது.
பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு
பெட்ரோலுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்வதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, டெல்லியில் உள்ள பூசா ரோட்டில் இருக்கும் 'இந்தியன் ஆயில்' (Indian Oil) பங்க்கில், முதல் E85 விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்.
பெட்ரோலை விட விலை மலிவு
டெல்லியில் ஒரு லிட்டர் E85 எரிபொருளின் விலை ரூ.82.12 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனையாகும் E20 பெட்ரோலை விட சுமார் ரூ.20 குறைவு.
வாடிக்கையாளர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க, E85 வழங்கும் டிஸ்பென்சர் மெஷின்களுக்குத் தனி பிராண்டிங் மற்றும் லேபிள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எண்ணெய் இறக்குமதி குறையும்
கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பை வலுப்படுத்துவதே அரசின் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
மத்திய அரசு பெரிய இலக்கு
இந்த விற்பனையை டெல்லி-என்.சி.ஆர் மற்றும் மும்பை-புனே-நாக்பூர் வழித்தடங்களில் சுமார் 50 முதல் 100 E85 பங்க்குகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தவும், 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சுமார் 5,000 E85 விற்பனை நிலையங்களைத் திறக்கவும் மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
E22, E25, E27, E30 போன்ற அதிக எத்தனால் கலந்த எரிபொருள்களுக்கான திறன்களையும் அரசு அறிவித்துள்ளது. இது மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும்.
E85 என்றால் என்ன?
தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் E20 பெட்ரோலில் 20% எத்தனாலும், 80% பெட்ரோலும் உள்ளது. ஆனால், இப்போது அறிமுகமாகியுள்ள E85 எரிபொருளில் 85% எத்தனால் மற்றும் 15% பெட்ரோல் மட்டுமே இருக்கும்.
எத்தனால் உள்நாட்டிலேயே விவசாயப் பொருட்களிலிருந்து (Agricultural feedstocks) தயாரிக்கப்படுவதால், இது கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் பெருமளவில் குறைக்கும்.
மாத எரிபொருள் செலவு மிச்சமாகும்
வாகன ஓட்டிகளின் தினசரி பயணச் செலவு குறையும்.விலை குறைவே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாக இருக்க போகிறது.
பிரத்யேக வாகனங்களில் பயன்படுத்தலாம்
சாதாரண பெட்ரோல் வாகனங்களில் E85 எரிபொருளைப் பயன்படுத்த முடியாது. இந்த அதிக எத்தனால் கலவையைத் தாங்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் வாகனங்களில் (Flex-fuel vehicles) மட்டுமே இதை நிரப்ப முடியும்.
மாருதி சுசுகியின் வேகன்ஆர் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் கார், E100 வரையிலான எத்தனால் கலவையிலும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பயணிகள் கார் என்பதால், இது E85 எரிபொருளுக்கு முழுமையாகப் பொருந்தும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிரபலமான 100 சிசி பிரிவில் ஸ்பிளெண்டர்+ மற்றும் ஹெச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளின் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் மாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த பைக்குகள் E20 முதல் E85 வரையிலான எந்த எரிபொருளிலும் இயங்கும். இவை ஜூலை முதல் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் விற்பனைக்கு வருகின்றன.
சிறந்த மாற்று எரிபொருள்
வரும் ஆண்டுகளில் அதிக ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் வாகனங்கள் சந்தைக்கு வரும்போது, E85 எரிபொருள் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த செலவில் ஒரு சிறந்த மாற்று எரிபொருளாக இருக்கும்.
=================