

ஆசிய அளவில் உயர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி
Asia Market Gold Price 2026 Update : தங்கத்தின் ஸ்பாட் விலை ஆசிய சந்தையில், தற்போது 5 ஆயிரம் டாலரை கடந்து 5080 டாலரில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் வெள்ளியின் ஸ்பாட் விலையும் 109.46 டாலர் என்ற அளவுக்கு திடீரென உயர்ந்துள்ளது,
இந்திய அளவில் புதிய தங்கம் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
விலை உயர்வுக்கான காரணிகள்
இந்த உயர்வுக்கு ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான புவிசார் அரசியல் அச்சங்கள் மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்-ன் அடுத்த தலைவர் தொடர்பான முடிவுகள் முக்கிய காரணங்களாக உள்ளன.
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் தங்கம், வெள்ளி விலை முதலீட்டாளர்களுக்கு முக்கியமான சொத்துக்களாக மாறியுள்ளது என்பதே ஒரு நிதர்சனமான உண்மை.
ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரம்
அபுதாபியில் ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையேயான முதல் மூன்று தரப்பு அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அவை முடிந்தன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் தொடர்ந்து நடைபெறும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அடுத்த வாரமே இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்க அதிகாரி ஒருவர் பிப்ரவரி 1ஆம் தேதி புதிய சுற்று தொடங்கும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், உலக அளவில் அச்ச உணர்வு அதிகரித்துள்ளது. இதனால் தங்கம், வெள்ளி மீதான முதலீடும் அதிகரித்துள்ளது.
கையெழுத்துக்காக காத்திருக்கும் ஜெலனஸ்கி
உக்ரைனுக்கான அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதம் இரண்டு நாள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, உக்ரைனுக்கான அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தம் "100% தயாராக உள்ளது" என்று ஜெலென்ஸ்கி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
கையெழுத்திடுவதற்கான தேதி மற்றும் இடத்தை உறுதி செய்ய காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மற்ற பிரச்சனைகள் ரஷ்யா-உக்ரைன் மோதல் தொடர்வது மட்டுமின்றி, வெனிசுலாவில் ராணுவ தலையீடு மற்றும் கிரீன்லாந்தை இணைக்கும் அச்சுறுத்தல்கள் போன்ற புவிசார் சிக்கல்களும் தங்கத்தின் விலையை உயர்த்தியுள்ளன. இத்தகைய சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சொத்துகளை நாடுகின்றனர்.
புதிய ஃபெட் தலைவர் தேர்வு என டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஃபெட் தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமிக்க நேர்காணல்களை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளார். அடுத்த ஃபெட் தலைவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டவ்விஷ் (வட்டி விகிதத்தை குறைக்கும் போக்கு கொண்ட) தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த ஆண்டு மேலும் வட்டி விகித குறைப்புகள் எதிர்பார்க்கப்படும்.
வட்டி விகிதங்கள் குறைந்தால் தங்கம் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இன்று பதிவான உயர்வுக்கு இதுவும் காரணம்.தங்கம் விலையின் தொடர் உயர்வு சாமானிய மக்களுக்கு முதலீடு மற்றும் சேமிப்பு செய்வதில் பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ள நிலையில், புவிசார் அச்சங்கள் குறையாமல் இருப்பதால், தங்கம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.