

ஏற்ற இறக்கத்தில் தங்கம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஆனால் பெரிய அளவில் விலை ஏறவில்லை. 96 ஆயிரம் ரூபாய் என்ற அளவிலேயே சவரன் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
தங்கம் - வரலாற்று உச்சம்
இந்த நிலையில் இன்றைய தினம் அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை அதிகரித்தது. சென்னையில் இன்று காலை தங்கம் தனது வரலாறு காணாத உச்சத்தை தொட்டது . 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமின் விலை வரலாற்றிலேயே இல்லாத அளவாக 200 ரூபாய் உயர்ந்து, 12,250 ரூபாய்க்கு விற்பனையானது .
இதன் மூலம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் ஒரு சவரன் விலை 1600 ரூபாய் உயர்ந்து 98 ,000 ரூபாய் என்ற விலையை எட்டியது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 98 ,000 ரூபாய் என்பது வரலாற்றிலேயே இல்லாத இல்லாத புதிய உச்சமாகும்.
ஒரு லட்சத்தை எட்டும் விலை
போகிற போக்கை பார்த்தால் இந்த ஆண்டு முடிவதற்குள் தங்கம் விலை 1 லட்சம் ரூபாயை எட்டி விடுமோ என மக்கள் அச்சமடைந்தனர். இந்த சூழலில் பிற்பகலில் மீண்டும் ஒருமுறை தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 120 ரூபாய் உயர்ந்திருக்கிறது , ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்வு கண்டிருக்கிறது.
அந்த வகையில் பார்க்கும்போது சென்னையில் தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 12,370 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வரலாற்றிலேயே இல்லாத உச்சபட்ச விலையாக 98, 960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 2560 ரூபாய் விலை உயர்வை கண்டிருக்கிறது .
24 கேரட் தங்கம்
சென்னையில் தற்போதைய நிலவரப்படி 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 13,494 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,07,952 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் புதிய உச்சம்
தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலை நாள்தோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வெள்ளியும் ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்திருக்கிறது.
தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி
இன்று காலை 6 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி மாலையில் கூடுதலாக ஒரு ரூபாய் விலை உயர்ந்து 216 ரூபாய்க்கும் , ஒரு கிலோ 2,16,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளியின் தொடர் விலையேற்றம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
====================