

நவம்பரில் ஜிஎஸ்டி வசூல்
GST Collection November 2025 Update in Tamil : இதுபற்றி மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் என்னவென்றால், “நாட்டின் ஜிஎஸ்டி வசூல் நவம்பரில் ரூ.1,70,276 கோடியாக இருந்தது. கடந்த 2024ம் ஆண்டு நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் ஜிஎஸ்டி வசூல் வெறும் 0.7% மட்டுமே உயர்ந்துள்ளது. இதற்கு ஜிஎஸ்டி குறைப்பே முக்கிய காரணம் ஆகும்.
8 மாதங்களில் 8.9% உயர்வு
நடப்பாண்டு அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1.87 லட்சம் கோடியிலிருந்து 4.6 சதவீதம் அதிகரித்து ரூ.1.95 லட்சம் கோடியைத் தொட்டது. 2025ம் ஆண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ஜிஎஸ்டி வசூலானது 8.9 சதவீதம் உயர்ந்து ரூ.14,75,488 கோடியாக அதிகரித்துள்ளது.
நிகர அளவிலான ஜிஎஸ்டி வருவாய் நவம்பரில் 1.3 சதவீதம் உயர்ந்து ரூ.1,52,079 கோடியாக உள்ளது. வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்ட மொத்த ரீபண்ட் 4 சதவீதம் குறைந்து ரூ.18,196 கோடியாக இருந்தது.
ஜிஎஸ்டி மாற்றங்களால் குறைவு
செப்டம்பர் 22ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்களுடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது. அரசின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.7 லட்சம் கோடியாக இருந்தபோதிலும், நிகர ஜிஎஸ்டி வசூல் 1.3 சதவீதம் அதிகரித்து ரூ. 1.52 லட்சம் கோடியாக உள்ளது. இருப்பினும், உள்நாட்டு வருவாய் 1.5 சதவீதம் குறைந்துள்ளது.
வலுவான நிலையில் பொருளாதாரம்
சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் கடுமையான வரிகளால் இந்தியப் பொருளாதாரம் சற்று பாதிக்கப்பட்டாலும், சமீபத்திய ஜிஎஸ்டி குறைப்புகளால் பொருளாதாரம் இந்த ஆண்டு வலுவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களில் வசூல் விவரம்
மாநில வாரியாக நவம்பர் மாதத்தில்(GST Collection November 2025 State Wise in Tamil) மகாராஷ்டிரா மாநிலம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, ஹரியானா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பெரும்பாலான மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. சில மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் ஜிஎஸ்டி வசூலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மகாராஷ்டிராவில் 3 சதவீத வளர்ச்சியும், கர்நாடகாவில் 5 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.
===========