

வரிசை கட்டும் பண்டிகைகள்
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைக் காலம் வரிசை கட்டி வருகின்றன. இதனால் பலரும் விழாக்கால சலுகைகளை எதிர்பார்த்து, வீட்டுக்குத் தேவையான புதிய AC, TV, Fridge உள்ளிட்ட பொருட்களை வாங்கத் திட்டமிடுவது வாடிக்கை.
விலை உயரும் அபாயம்
ஆனால், இந்த ஆண்டு புதிதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஒருபுறம் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், மறுபுறம் புயல், பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களும் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வருகின்றன.
செலவுகள் அதிகரிப்பு
இதன் காரணமாக, எலக்ட்ரானிக் பொருட்களின் உற்பத்திச் செலவு, மூலப்பொருட்களின் விலை, சரக்குக் கட்டணம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நுகர்வோர் சாதனங்கள் விலை அதிகரிக்கும்
இதனால் நுகர்வோர் சாதனங்களின் விலையை நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி செலவில் தாக்கம்
AC தயாரிப்புக்கு முக்கியமாக தேவைப்படும் பித்தளை, ஸ்டீல், அலுமினியம், பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விலை உயர்வு, சரக்குக் கட்டண அதிகரிப்பு ஆகியவை உற்பத்திச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனா மற்றும் தைவானில் இருந்து வரும் சில உதிரிபாகங்களின் விநியோகமும் புயல்கள் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாகவே நிறுவனங்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
இனி புதிதாக AC அல்லது வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கச் சென்றால், முன்பைவிட கூடுதல் பணம் செலவாகலாம்.
அக். 1 முதல் விலை அதிகரிப்பு
ஏர் கண்டிஸன், எல்இடி டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களின் விலை அக்டோபர் 1 முதல் உயர வாய்ப்புள்ளதாக தொழில்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
5 முதல் 8 சதவீதம் வரை உயரும்
AC-களின் விலை சுமார் 5 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில நிறுவனங்கள் TV, Washing Machine, Refrigerator உள்ளிட்ட பொருட்களின் விலையையும் சுமார் 3 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டு உள்ளன.
இதனால் பண்டிகை காலங்களில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.
========================