

புகையிலை பொருட்கள்
Parliament Passes Central Excise (Amendment) Bill 2025 on Tobacco Duty : இந்தியாவில் புகையிலை பொருட்கள் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தில், புகையில் பொருட்கள் மீதான வரி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய மசோதாக்கள் தாக்கல்
அந்த வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இரண்டு புதிய மசோதாக்கள் சிகரெட் மற்றும் பான் மசாலாக்களின் விலையை பன்மடங்கு அதிகரிக்க வழிவகை செய்துள்ளன. குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கலால் வரி சட்டத் திருத்த மசோதா, சுகாதார பாதுகாப்பு வரி மசோதா என இரு மசோதாக்களை தாக்கல் செய்தார்.
சிகரெட் மீது கலால் வரி
தற்போதுள்ள கலால் வரி சட்டத்தின் கீழ், 65 மில்லி மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 200 ரூபாயும்,
65 மில்லி மீட்டர் முதல் 70 மில்லி மீட்டருக்கு மிகாமல் இருக்கும் ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 250 ரூபாயும் கலால் வரி விதிக்கப்பட்டுகிறது.
கலால் வரி அதிகரிப்பு
ஆனால், புதிய கலால் வரி சட்டத் திருத்த மசோதா மூலம் 65 மில்லி மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 2 ஆயிரத்து 700 ரூபாயும், 65 மில்லி மீட்டர் முதல் 70 மில்லி மீட்டருக்கு மிகாமல் இருக்கும் ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல மடங்கு வரி அதிகரிப்பு
சிகரெட்டின் வகையை பொறுத்து, கலால் வரி பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக 11 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும்.
மெல்லும் புகையிலைக்கான வரி நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டு, 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலைக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், நிக்கோட்டின், சுவையூட்டிகள் உள்ளிட்ட புகையிலை சேர்மானங்களுக்கான வரி 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதமாகவும் 5 மடங்கு உயர்த்தப்படும்.
ரூ.18 சிகரெட், ரூ.72
இதனால், தற்போது 18 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை 72 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, பான் மசாலாவுக்கான 40 சதவீத ஜிஎஸ்டி தொடர்ந்து விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, புதிய சுகாதார பாதுகாப்பு வரி மசோதா மூலம் கூடுதல் செஸ் வரி விதிக்கவும் முடிவெடுத்துள்ளது. இம்மசோதாக்கள் விரைவில் சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.
ஆதரவும், எதிர்ப்பும்
சிகரெட் விலை உயர்வு மக்களிடையே புகைப்பழக்கத்தை குறைத்து, ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வழிவகுக்கும் என்று வரவேற்பு இருக்கும் நிலையில், விலையேற்றம் சட்டவிரோத கடத்தல் புகையிலை புழக்கத்தை அதிகரிக்கும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
============