

Bamboo biofuel is emerging as a premier choice for next-generation renewable energy, with recent scientific breakthroughs and industrial projects positioning it as a highly cost-effective, low-carbon alternative to both petroleum and conventional corn ethanol
வாகன எரிபொருள்
வாகன எரிபொருளுக்கு பெட்ரோல், டீசலை நம்பியே இந்த உலகமானது செயல்பட்டு வருகிறது. எனவே, கச்சா எண்ணெய் சந்தை மிகப்பெரிய போட்டியாக உள்ளது.
இயற்கை வளங்களில் எரிபொருள்
எண்ணெய்க்காக நடக்கும் போர்களும், பல்வேறு நாடுகளை பாதித்து வருகின்றன. எனவே, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக இயற்கை வளங்களில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மூங்கிலில் இருந்து உயிரி எரிபொருள்
அந்த வகையில், மூங்கிலில் இருந்து திரவ எரிபொருளைத் தயாரிக்கும் சாத்தியம் குறித்த ஆய்வு கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் வொர்செஸ்டர் பாலிடெக்னிக் நிறுவனம் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், மூங்கிலைக் கொண்டு குறைந்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்துடன் எரிபொருள் தயாரிக்க முடியுமா என ஆய்வு செய்துள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பம் வெற்றி பெற்று, வணிக அளவில் வளர்ந்தால், எதிர்காலப் போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றத்துக்கு வழிவகுக்கலாம்.
மூங்கிலிலிருந்து எரிபொருள் எப்படி?
மூங்கிலில் உள்ள உயிரிப் பொருட்களை வெப்பம் மற்றும் அழுத்தத்தின் உதவியுடன் திரவமாக மாற்றும் முறையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு நீர்வெப்ப திரவமாக்கல் எனப் பெயர்.
இந்தச் செயல்முறையில் மூங்கிலிலிருந்து உயிரி மூல எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த எண்ணெயை அப்படியே வாகனத்தில் ஊற்றிப் பயன்படுத்த முடியாது. பெட்ரோல் அல்லது டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற எரிபொருளாக மாற்ற கூடுதல் செயலாக்கம் தேவை.
ஒரு லிட்டர் ரூ.65?
இந்த ஆய்வில், பெரிய அளவிலான வணிக உற்பத்தி முழுமையாக வளர்ச்சியடைந்த நிலையில், மூங்கில் அடிப்படையிலான எரிபொருளின் விலை ஒரு கேலன் பெட்ரோலுக்குச் சமமான ஆற்றலுக்கு 2.75 அமெரிக்க டாலராக இருக்கலாம் எனப் பொருளாதாரக் கணிப்பு தெரிவிக்கிறது.
இதை ஒரு லிட்டருக்குக் கணக்கிட்டால் சுமார் ரூ.65 என மதிப்பிடலாம். ஆனால், இது தற்போதைய சந்தை விலையோ பெட்ரோல் பங்க்கில் விற்கப்படும் விலையோ அல்ல.
தொழிற்சாலையை அமைத்தல், இயக்குதல் உள்ளிட்ட செலவுகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கணிப்பு மட்டுமே. ஆகவே, உண்மையான விலை என்பது, உற்பத்தி அளவு, செயலாக்கச் செலவு மற்றும் விநியோகத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
மாசு பெருமளவில் குறையுமா?
மூங்கில் எரிபொருளின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் வழக்கமான பெட்ரோலிய டீசலுடன் ஒப்பிடும்போது சுமார் 26 மடங்கு குறைவாக இருக்கலாம்.
மூங்கில் வளரும்போது கார்பனைச் சேமிப்பதும், அதை எரிபொருளாக மாற்றும் செயல்முறையின் செயல்திறனும் இந்தக் கணக்கில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
வேகமாக வளரும் தாவரம் மூங்கில்
மூங்கிலின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று, அது வேகமாக வளரக்கூடிய தாவரம் என்பதுதான். அமெரிக்காவில் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் எரிபொருளுக்கு இணையான அளவை மூங்கிலிலிருந்து தயாரிக்க முடிந்தால், அதற்குத் தேவைப்படும் பயிரிடப்பட்ட நிலம் சுமார் 13 சதவீதமாக இருக்கலாம் தெரிகிறது.
வணிக ரீதியில் எப்போது விற்பனை
மூங்கிலில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிலையில் இருப்பதால், இது உடனடியாக பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகக் கிடைக்கப் போகிறது என்று கூற முடியாது.
எதிர்காலத்தில் கனரக வாகனங்கள், ரயில்கள், விமானங்கள் போன்ற துறைகளில் குறைந்த கார்பன் எரிபொருளுக்கான ஒரு வாய்ப்பாக மூங்கில் அமையலாம் என்ற நம்பிக்கை மட்டுமே இப்போது கிடைத்து இருக்கிறது.
================