

இந்திய ரயில்வே
இந்திய ரயில்வேயில் பல்வேறு அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு புல்லட் ரயிலும் அறிமுகமாக இருக்கிறது.
வந்தே பாரத் ரயில்கள்
மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களைக் காட்டிலும் பயண நேரம் மிகக் குறைவாக இருப்பதாலும், அதிநவீன சொகுசு வசதிகள் என்பதாலும் பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயில்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.
விமானப் பயணத்திற்கு இணையான சேவைகளும், வசதிகளும் வழங்கப்பட்டு வருவதால், ரயில்களில் விரும்பிப் பயணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வேகமான, சொகுசான சேவை
வேகமான மற்றும் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் வந்தே பாரத் ரயில்கள், 2019ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
162 ரயில்கள் இயக்கம்
தற்போது நாடு முழுவதும் 162 வந்தே பாரத் ரயில்கள் செயல்பாட்டில் உள்ளன. பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தொலைதூரப் பயணங்களுக்கு ஏற்ற வகையிலான படுக்கை வசதி கொண்ட 'வந்தே பாரத் ஸ்லீப்பர்' (Vande Bharat Sleeper) ரயில்களும் நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வந்தே பாரத் மூலம் இணைக்கப்படும் நகரங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தெற்கு ரயில்வேயில் வந்தே பாரத்
தெற்கு ரயில்வேயின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் 2022ம் ஆண்டு வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழகத்தில் வந்தே பாரத்
சென்னையில் இருந்து மைசூரு, பெங்களூரு, கோவை, திருநெல்வேலி, விஜயவாடா, நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கும், மதுரை - பெங்களூரு, மங்களூரு - திருவனந்தபுரம், கோவை - பெங்களூரு போன்ற பல்வேறு முக்கிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகின்றன.
15 லட்சம் பேர் பயணம்
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் வந்தே பாரத் ரயில்களில் 15.21 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
ரூ. 162 கோடி வருவாய்
இக்காலக்கட்டத்தில் ₹162.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் வந்தே பாரத் ரயில்கள் எவ்வளவு அவசியம், பயணிகள் எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது
கடைசி நிமிட முன்பதிவு வசதி
வந்தே பாரத் ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை காலியாக உள்ள இருக்கைகளுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கும் 'கரண்ட் புக்கிங்' (Current Booking) வசதி பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் உயர்வதற்கு ஒரு முக்கியக் காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
==========