

தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபர்
Legend Saravanan Leader Movie Title Teaser in Tamil : தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபராக திகழ்ந்து வருபவர் லெஜெண்ட் சரவணன். இவரது முதல் படமான ‘லெஜெண்ட்’ திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்தப் படத்தை ஜேடி-ஜெர்ரி தான் இயக்கி இருந்தனர்.
ட்ரெண்ட் செட்டரான லெஜெண்ட்
படத்தில் நடிப்பதற்கு முன்னரே லெஜெண்ட் சரவணன் ட்ரெண்ட் செட்டராக இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் பல தொழில் நிறுவனங்களும் தங்களுடைய விளம்பரங்களில் முன்னணி நடிகர் நடிகைகளை நடிக்கவைத்த நிலையில், இவர் மட்டும் சற்று மாறாக ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் இணைந்து தங்களது விளம்பரங்களில் நடித்து மக்களிடையே தனது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டார்.
கதாநாயகன் கனவு
விளம்பரங்களில் நடிக்கும் போதே பல ட்ரோல்களுக்கு உள்ளான போதிலும் யாருடைய கருத்துகளையும், ட்ரோல்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வந்தார். இவரது நிலையான உறுதி, தன்னம்பிக்கையே இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. இந்தநிலையில் தான் லெஜெண்ட்டிற்கு உருவானது கதாநாயகன் கனவு.
ஹீரோவாக உருவான தருணம்
தனது கனவை கடந்த 2022 ஆம் ஆண்டு லெஜெண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் நனவாக்கிக்கொண்டார். அதற்குமுன்பு வரை ’அண்ணாச்சி’ என்று அழைக்கப்பட்டு வந்தவர் அதன்பிறகு ’லெஜெண்ட் சரவணன்’ என்றே அழைக்கப்பட்டு வருகிறார். பல பில்டப்புகளுடன் வெளியான லெஜெண்ட் படம் பல ட்ரோல்களை சந்தித்தது. பிரம்மாண்ட பொருட்செலவில் பல நட்சத்திர பட்டாளங்களுடன் எடுக்கப்பட்ட நிலையிலும், ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை.
தோல்விகளைக் கண்டு துவண்டுபோகாத லெஜெண்ட்
முதல் படம் ரசிகர்களின் கவனத்தைப் பெறவில்லை என்றாலும் மனம் தளராது, முதல் படத்தில் செய்த தவறுகளை சரிசெய்து தற்போது தனது இரண்டாவது படத்தின் மூலம் மீண்டும் களமிறங்குகிறார் சரவணன். இந்த படத்தை பிரபல இயக்குநர் துரை செந்தில்குமார் தான் இயக்குகிறார். இவர், எதிர்நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாஸ், கருடன் முதலான படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் கவனம் பெறும் ‘லீடர்’
லெஜெண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்திற்கு ‘லீடர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில், இப்படத்தின் டீசரும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. லெஜெண்ட் சரவணனின் நடிப்பு இந்த படத்தில் மெறுகேறியுள்ளதாகவும், இந்த படம் தான் அவரது முதல் படமாக கருதப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லீடரில் நட்சத்திர பட்டாளம்
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடெக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் ஷாம், ஆண்ரியா,சந்தோஷ் பிரதாப், பாகுபலி பிரபாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது இப்படத்தினை மேலும் எதிர்பார்ப்பிற்குள்ளாக்கி, ரசிகர்களை படத்தின் வெளியீட்டை எதிர்நோக்க செய்துள்ளது.
====