Bison Review: பைசன் படம் இதுதானா? இத பாத்துட்டு போய் படம் பாருங்க!

Bison Movie Review in Tamil : வாழை திரைப்படத்தை தொடர்ந்து, மாரி செல்வராஜின் பைசன் படத்தின் கரு மற்றும் வணிக வசூல் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராயலாம்.
Director Mari Selvaraj Dhruv Vikram Movie Bison Movie Review in Tamil
Director Mari Selvaraj Dhruv Vikram Movie Bison Movie Review in Tamil
3 min read

பைசன் இயக்கம்

Bison Movie Review in Tamil : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் பைசன் காளமாடன். மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை நீலம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அப்லாஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.

படத்தின் களம்

கபடி என்பதை தனது உயிராய் பார்க்கும் துருவ் விக்ரம் (கிட்டான்), சிறு வயதில் இருந்தே கபடி விளையாட வேண்டும் என்கிறார். பள்ளியில் படித்துவரும் நேரத்தில், பள்ளியின் PT வாத்தியார் துருவ் விக்ரமின் ஆற்றலை பார்த்து அவரை பள்ளி கபடி அணியில் சேர்த்துவிடுகிறார். ஆனால், துருவ் கபடி ஆடுவது அவருடைய தந்தையான பசுபதிக்கு (வேலுசாமி) பிடிக்கவில்லை.

சாதியின் காரணமாக பல வேலிகள் தங்களை சுற்றி இருக்கிறது. மேலும், தங்களின் சொந்தக்காரன் கூட ஊர் அணியில் என் மகனை சேர்த்துக்கொள்ள மாட்டான். இதனால் என் மகனுக்கு கபடி வேண்டாம் என பசுபதி பயப்படுகிறார். ஆனால், இந்த கபடி உங்கள் மகனை மிகப்பெரிய அளவிற்கு கூட்டிச் செல்லும் என PT வாத்தியார் கூறி, துருவ் விக்ரமை அடுத்தடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கிறார்.

இருதரப்பினர் பிரச்சினை

ஊருக்குள் சாதி பிரச்சனை இரு தரப்பினர் இடையே உள்ளது. ஒரு பக்கம் அமீர் (பாண்டியராஜ்), மறுபக்கம் லால் (கந்தசாமி) ஆகிய இருவரும், அவர்களை சார்ந்தவர்கள் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் வெட்டி கொலை செய்து வருகிறார்கள். ஒரு தரப்பினர் அமீ்ரை தங்களது தலைவராக பார்க்கின்றனர். அதே போல் மற்றொரு தரப்பினர் லாலை தங்களின் தலைவராக பார்க்கிறார்கள்.

சாதி பிரச்சினை

இப்படியொரு சாதி பிரச்சினை இருந்தாலும், தன்னை சுற்றி போடப்பட்டுள்ள வேலிகளை ஒவ்வொரு கட்டமாக உடைத்து எறிந்து கொண்டு செல்லும்பொழுது , ஒரு கட்டத்தில் இந்த சாதி பிரச்சனைக்குள் துருவ் சிக்குகிறார். இதனால் அவரின் கை உடைக்கப்படுகிறது. ஒரு பக்கம் சாதி, அதனால் தங்களுக்கு நடக்கும் கொடுமைகள், அவமானங்கள், இழப்புகள், என அனைத்தையும் கடந்து பல போராட்டங்களை சந்தித்து துருவ் விக்ரம் வெற்றிபெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதையாக அமைந்துள்ளது.

படத்தின் உருவாக்கம்

இயக்குநர் மாரி செல்வராஜ் கதையை சிறப்பாக திரைக்கதையாக மாற்றி திரையில் வழங்கியுள்ளார். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை நம்மை பதட்டத்துடன் வைத்திருக்கிறார் இயக்குநர் மாரி. காரணத்துடன் நகரும் திரைக்கதை நம்மை அடுத்து என்ன அடுத்து என்ன என யோசிக்க வைக்கிறது. விளையாட்டு போட்டியில் கதாநாயகன் வெற்றிபெறுவார் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை சுவாரஸ்யமாகவும், நம்மை பதட்டத்துடன் பார்க்க வைத்தது தான் இந்த படத்தின் மாபெரும் வெற்றி ஆகும்.

காதல் காட்சிகளின் களம்

இதில் அனுபமா பரமேஸ்வரன் - துருவ் விக்ரம் காதல் காட்சிகள் இந்த படத்திற்குள் இருப்பது சற்று யோசிக்க வைக்கிறது. இரு நடிகர்களும் சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும், திருமணம் என்பது தான் காதல் செய்து பிடித்தவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்துக்கள் சிறப்பாக இருந்தது.

துருவ் விக்ரம் நடிப்பு

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. கதாநாயகன் துருவ் விக்ரம் 'கிட்டான்' என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இது துருவ் விக்ரம்-ஆ என ஆச்சரியப்பட வைத்துவிட்டார். இப்படத்திற்காக அவர் போட்டுள்ள உழைப்புக்கு தனி பாராட்டு. மற்ற நடிகர்களின் நடிப்பு பெரிதளவில் படத்திற்கு பங்களித்தாலும், இவர் மொத்த படத்தையும் தனது நடிப்பால் தோளில் சுமந்து வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறார்.

மற்ற கதாபாத்திரங்கள்

அடுத்ததாக தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்த பசுபதி. இவருடைய நடிப்பு சொல்ல வேண்டுமா என்ன? எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி, நம் அனைவரையும் அவரின் கதாபாத்திரத்திலே தங்க வைத்து விடுவார். அதை பைசன் படத்தில் சிறப்பாக செய்துள்ளார். தன் மகனை காக்க போராடும் தந்தையாக இப்படத்தில் அவர் நடித்தது, இறுதியில் தன் மகனின் வெற்றியை பார்த்து கண்கலங்கியது உள்ளிட்ட அவரின் நடிப்பு தெரிந்த விதங்கள் எல்லாம் அசத்தல். லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் என அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். PT வாத்தியாராக வந்த நடிகர் மதன்குமார் கவனத்தை ஈர்க்கிறார். அயலி வெப் தொடருக்கு பிறகு, இப்படம் அவருக்கு நல்ல இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று கொடுக்கும். பொதுவாக, இந்த படத்தில் வந்த ஒவ்வொருவரும் தங்களது உச்சபட்ச நடிப்பினை வெளிப்படுத்தி கதையை அழகாக நகர்த்தி முடித்துள்ளனர்.

படத்தின் பின்புலம்

படத்தினில் இருந்த ஹீரோக்களை தாண்டி திரையில் தங்களது முகத்தை காட்டாமல் ஹீரோக்கள் ஆகியுள்ளனர், இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் மற்றும் டெக்னீஷியன்கள். இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பின்னணி இசை மற்றும் பாடல்களில் பட்டையை கிளப்பிவிட்டார். ஒளிப்பதிவாளர் எழில் அரசு ஒவ்வொரு காட்சியையும் அழகாக எடுத்த மக்களுக்கு விருந்தளித்துள்ளார். . சக்தி திருவின் எடிட்டிங் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மேலும் படிக்க : Kantara Review: காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்! வசூல் இவ்வளவு வருமா?

படத்தின் பதில்

ஆகவே, மாரி செல்வராஜின் தொடர் இயக்கத்தில் வெளிவரும் படங்களில் மக்கள் மனதை வென்று விடும் இடத்தில் இந்தப்படம் இருக்கும் என்றாலும், வணிக ரீதியாக இதன் வெற்றி எப்படி இருக்கும் என்பதை பொருத்து இருந்துதான் பார்க்கவேண்டும். காட்டாயம் அனைவரும் பார்க்கும் படமாக பைசன் அமைந்திருக்கிறது.

படத்தின் வசூல்

வாழை படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜின் பைசன் திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கபடும் நிலையில், இந்த படத்தின் முதல் வசூலாக ஒரு நாளில் 7 முதல் 8 கோடியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in