

Filming for 'Rajini 173' Set to Begin Soon! Do You Know Who the Director Is?
'ஜெயிலர் - 2' திரைப்படப் பணிகளுக்குப் பிறகு, ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 173-ஆவது திரைப்படத்தின் பிரம்மாண்ட ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.
ஆகஸ்ட் மாத வெளியீடு
தற்போது ரஜினிகாந்த் 'ஜெயிலர் - 2' திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்திய அளவில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் இத்திரைப்படம், ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி - 173 படத்தை இயக்குவது யார்?
இதனிடையே 'ஜெயிலர் - 2' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் 173-ஆவது திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்விகளும், எதிர்பார்ப்புகளும் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது. அதற்கு விடை கொடுக்கும் விதமாக ஒரு சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பிறந்தநாள்
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து சிறப்பு வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தது.
வழக்கமாகத் தங்களது தயாரிப்பில் உருவாகும் படங்களின் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு மட்டுமே இந்நிறுவனம் இத்தகைய பிறந்தநாள் வீடியோக்களை வெளியிடும் வழக்கம் கொண்டது.
இதன் மூலம், ரஜினிகாந்தின் 173-ஆவது திரைப்படத்தை அஷ்வத் மாரிமுத்து தான் இயக்கவுள்ளார் என்பது ஏறத்தாழ உறுதியுள்ளதாக தெரிகிறது.
சென்னையில் தயாராகும் பிரம்மாண்ட செட்!
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பே, இதற்கான படப்பிடிப்பு வேலைகள் மிக வேகமாக முடுக்கப்பட்டுள்ளன.
பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள்?
இதற்காக சென்னை பூந்தமல்லி பகுதியில் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இப்பணிகள் முடிந்தவுடன் மிக விரைவில் படப்பிடிப்பு முறைப்படி துவங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
முன்னதாக அஷ்வத் மாரிமுத்து 2020-இல் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் முந்தைய படப்புகளும், ஒப்பந்த விவரங்களும்
2022-இல் 'ஓ மை கடவுளே' திரைப்படத்தை 'ஓரி தேவுடா' என்ற பெயரில் தெலுங்கில் மறுஆக்கம் செய்தார். தொடர்ந்து 2025-ல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தை இயக்கினார்.
தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் 'தலைவர் 173' மற்றும் நடிகர் சிலம்பரசனின் 'STR 51' ஆகிய பிரம்மாண்டத் திரைப்படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
======