

'Ulaganayagan' Kamal Haasan has built a unique empire for himself across India.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், இந்திய சினிமாவின் ஒப்பற்ற கலைஞருமான கமல்ஹாசன், திரைத்துறைக்கு வந்து 66 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, தனது 67-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார்.
'67 Years of Kamalism'
இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடும் வகையில், அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் '67 Years of Kamalism' என்ற சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.
பார்த்தசாரதி டூ 'களத்தூர் கண்ணம்மா'
1954-ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று பிறந்த கமல்ஹாசனின் இயற்பெயர் பார்த்தசாரதி ஆகும். தந்தை சீனிவாசன் மற்றும் தாயார் இராஜலட்சுமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர்.
கலைப்பயணத்தின் தொடக்கம்
தாயாரின் மருத்துவ நண்பர் மூலம் ஏவிஎம் தயாரிப்பாளர் எம். சரவணனின் அறிமுகம் கிடைக்க, 1960-இல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பிற்காக குடியரசுத் தலைவர் விருதையும் பெற்றார்.
பன்முகத்தன்மையும் சாதனைகளும்
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனச் சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர் உலக நாயகன் கமல்ஹாசன்.
தேசிய விருதுகள்
'மூன்றாம் பிறை' (1983), 'நாயகன்' (1987), 'இந்தியன்' (1996) படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான 3 தேசிய விருதுகளையும், 'தேவர் மகன்' (1992) படத்திற்காகச் சிறந்த தயாரிப்பாளராக 1 தேசிய விருதையும், குழந்தை நட்சத்திரமாக 1 தேசிய விருதையும் வென்றுள்ளார்.
விருதுகளின் நாயகன் கமல்ஹாசன்
19 பிலிம்பேர் விருதுகள், 10 தமிழக அரசு விருதுகள், 4 நந்தி விருதுகளை வென்றுள்ள இவர், இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ (1990), பத்மபூஷண் (2014) மற்றும் பிரான்ஸ் அரசின் மதிப்பிற்குரிய 'செவாலியே' (2016) விருதுகளையும் பெற்றுள்ளார்.
கமல்ஹாசனின் பல்மொழி ஆதிக்கம்
தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் வங்காள மொழித் திரைப்படங்களிலும் நடித்து இந்திய அளவில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்.
"67 Years of Kamalism": சிறப்பு வீடியோ
குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, 'அரங்கேற்றம்', 'அபூர்வ ராகங்கள்', 'தசாவதாரம்' என 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இன்று 'உலகநாயகனாக' உருவெடுத்துள்ளார் கமல்ஹாசன்.
அவரது சாதனைகளை நினைவுகூரும் வகையில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள “67 Years of Kamalism” சிறப்பு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
=====