

தடைகளை தகர்த்த ஜனநாயகன்
இளைய தளபதி விஜய் நடிப்பில், வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி மாதமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
தவெக என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கியதன் காரணமாக, கடைசி திரைப்படமாக இப்படம் அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் இப்படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
பொங்கலுக்கு ரிலீசாக வேண்டிய ஜனநாயகன், சென்சார் போர்ட் பிரச்சினை, இணையத்தில் படம் கசிவு உள்ளிட்ட பல சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கியதால், படம் எப்போதும் ரிலீசாகும் என்றே தெரியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே, தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, பிற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க, முதல்வரானார் விஜய்.
ரசிகர்கள் சங்கமம்
அதன்பிறகு ஜனநாயகன் படத்திற்கு சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியது.
இறுதியாக பல்வேறு தடைகளைத் தாண்டி இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 8,000 ஸ்கிரீன்களில் வெளியாகி உள்ளது.
கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தமிழகம் தவிர்த்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் காலை 6 மணிக்கே சிறப்பு முதல் காட்சி திரையிடப்பட்டது. தமிழகத்தில் காலை 9 மணியளவில் இப்படம் வெளியானது.
ஜனநாயகன் - முன்னணி நட்சத்திரங்கள்
ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருக்கின்றர். அனிருத் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
தியேட்டர்களில் திருவிழா
பொதுவாகவே விஜய் படம் என்றாலே ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகள் முன்பாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.
ஜனநாயகன் விஜயின் கடைசி படம் கடந்த இரு தினங்களாகவே திரையரங்குகள் முன்பாக பேனர் அமைத்தல், தோரணம் உருவாக்குதல் உள்ளிட்டப் பணிகளில் ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இன்று அதிகாலை முதல் திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க படுஜோராக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
பொதுவாக தளபதி விஜய் என்ற டைட்டில் கார்டுடன் வெளியாகும் படம் தற்போது முதல் முறையாக “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்” என்ற டைட்டில் கார்டுடன் வெளியாகி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் விஜய் ரசிகர்கள் ஜனநாயகனை கொண்டாடி வருகிறார்கள். இதனால், அனைத்து திரையரங்குகளும் விழாக்கோலத்தோடு காட்சி தருகின்றன.
=================