

Title and first look of Rajinikanth's 'Thalaivar 173' released!
'Thalaivar 173' Title
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் எப்போதும் இணையத்தை ஆக்கிரமிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது அவரது 173-வது திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பல திருப்பங்களுக்குப் பின் அமைந்த கூட்டணி
நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு முதலில் கே.எஸ். ரவிகுமார், அவரைத் தொடர்ந்து சுந்தர். சி, பின்னர் சிபி சக்ரவர்த்தி என பல இயக்குநர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அவர்கள் அடுத்தடுத்து விலகினர்.
பல திருப்பங்களுக்குப் பிறகு, தற்போது இளம் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
தலைவர் 173 டைட்டில்
ரஜினிகாந்த் - அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்திற்கு 'தர்மன்' என பெயரிடப்பட்டுள்ளது.
சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்த '5 ரூபாய் டாக்டர்' கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், ரஜினிகாந்த் மருத்துவர் உடையில், அறுவை சிகிச்சை மையத்தில் கையில் ரத்தக்கரையுடன் கத்தி வைத்திருப்பது போன்ற சண்டைக் காட்சி இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மீண்டும் இணையும் ராக் ஸ்டார் அனிருத்!
பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 ஆகிய படங்களைத் தொடர்ந்து, ரஜினிகாந்தின் இந்த 173-வது திரைப்படத்திற்கும் ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைக்கிறார்.
ஹாட்ரிக் வெற்றியை நோக்கி அஷ்வத் மாரிமுத்து
அசோக் செல்வன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி மிகப்பெரிய வெற்றி கண்டவர் அஷ்வத் மாரிமுத்து.
அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அவர் இயக்கிய 'டிராகன்' திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்தது.
இப்போது மூன்றாவது படமாக சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதால், 'தர்மன்' படத்திற்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
====