

அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள்
Top 10 Highest-Grossing Indian Movies of 2025 : ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வருடமும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அதிக திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இந்தியா முழுவதும் பல மொழிகளில் சுமார் 1,519-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்தாண்டு வெளியாகி இருக்கின்றன.
1,519 படங்கள், ரு.12,291 கோடி வசூல்
இதன் மூலம் மொத்தம் ரூ.12,291 கோடி வசூலாகி இருக்கிறது. 10 படங்கள் மட்டும் ரூ.4,443 கோடியை ஈட்டி அதிக வசூல் செய்து சாதனை படைத்து இருக்கின்றன.
ரூ.1,000 கோடி வசூல் - ”துரந்தர்’
ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் நடித்த ‘துரந்தர்’, வசூலில் முதலிடத்தில் இருந்த ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படத்தை முந்தியிருக்கிறது. ‘துரந்தர்’ இந்தியாவில் ரூ.600 கோடியும் உலகம் முழுவதும் இப்போது வரை ரூ.925 கோடியையும் வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது.ஓரிரு நாட்களில் 1,000 கோடி வசூல் சாதனையை துரந்தர் நிகழ்த்தும் என்பதில் ஐயமில்லை.
‘காந்தாரா: சாப்டர் 1’
‘காந்தாரா: சாப்டர் 1’ இந்தியாவில் மட்டும் ரூ.622 கோடியும் உலகம் முழுவதும் ரூ.852 கோடியும் வசூலித்துள்ளது. விக்கி கவுஷல் நடித்து சூப்பர் ஹிட்டான ‘ஜாவா’ திரைப்படம், இந்தியாவில் மட்டும் ரூ.601 கோடியையும் உலகம் முழுவதும் ரூ.807 கோடியையும் ஈட்டியுள்ளது.
அசத்திய ‘சயாரா’
அஹான் பாண்டே, அனீத் பட்டா நடித்த ‘சயாரா’, இந்தியாவில் ரூ.330 கோடியும் உலகம் முழுவதும் ரூ.570 கோடியும் வசூலித்துள்ளது. முன்னணி ஹீரோக்கள் இல்லாத புதுமுக நடிகர்களின் படம் இவ்வளவு வசூலித்திருப்பது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வசூலில் சாதித்த ‘கூலி’
தமிழில் உருவாகி மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ரஜினியின் ‘கூலி’, இந்தியாவில் ரூ.285 கோடியும் உலகம் முழுவதும் ரூ.518 கோடியும் பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
வார் 2, மகாவதார் நரசிம்மா
இதற்கு அடுத்தடுத்த இடங்களில், வார் 2 (உலகம் முழுவதும் ரூ.364 கோடி), மகாவதார் நரசிம்மா (ரூ.326 கோடி), லோகா சாப்டர் 1: சந்திரா (ரூ.303 கோடி), பவன் கல்யாணின் ஓஜி (ரூ.295 கோடி), அக் ஷய்குமாரின் ஹவுஸ்புல் 5 (ரூ.288 கோடி) என திரைப்படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
ஜனநாயகன், பராசக்தி
2025ல் அதிக திரைப்படங்களை வெளியிட்டு இருக்கும் இந்தியா, 2026லும் மக்களை ஈர்க்கும் திரைப்படங்களை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறது. தமிழில் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்கள் பொங்கலை ஒட்டி ரிலீசாகின்றன.
=======================