

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
சீனாவுக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, 1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 44 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி, 2028-ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் நேரடியாகத் தகுதி பெற்று இரட்டை மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக லால்ரெம்சியாமி அடித்த ஒரே கோலே வெற்றியை உறுதி செய்தது.
அதே நேரத்தில், கோல்கீப்பர் சவிதா புனியா தடுத்த முக்கியமான பெனால்டி ஸ்ட்ரோக் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியை கௌரவிக்கும் வகையில் ஹாக்கி இந்தியா அமைப்பு சிறப்பு பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.11 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட உதவிப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
ஒடிசா அரசும் அறிவிப்பு :
ஹாக்கி இந்தியாவைத் தொடர்ந்து, ஒடிசா மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜியும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்துள்ளார்.
அதன்படி, தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா ரூ.11 லட்சமும், தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட உதவிப் பணியாளர்களுக்கு தலா ரூ.5.5 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, "ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த வெற்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்கும், வீரர்-வீராங்கனைகளின் முன்னேற்றத்திற்கும் ஒடிசா அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
===================