

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், மகளிருக்கான ஒற்றையர் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழக வீராங்கனை பேபி சஹானா ரவி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
நின்று விளையாடும் போட்டியில் பதக்கம்
இந்திய பாரா டேபிள் டென்னிஸ் வரலாற்றில், நின்றுகொண்டு விளையாடும் தடகளப் பிரிவில் முதன்முறையாகப் பதக்கம் வென்று அவர் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.
வெண்கலம் வென்றார் பேபி சஹானா ரவி
அரையிறுதிப் போட்டியில், ஐந்து முறை பாராலிம்பிக் தங்கம் வென்ற சீன நட்சத்திர வீராங்கனை மாவோ ஜிங்டியானை எதிர்த்து சஹானா மிகக் கடுமையாகப் போராடினார்.
இறுதியில் 8-11, 2-11, 4-11 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவிய போதிலும், அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கான வெண்கலப் பதக்கத்தை அவர் உறுதி செய்தார்.
குவியும் வாழ்த்துக்கள்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ள பேபி சஹானா ரவிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ரூ.30 லட்சம் அறிவித்த முதல்வர் விஜய்
அதன் ஒரு பகுதியாக, வெண்கலப் பதக்கம் வென்ற பேபி சஹானாவின் சாதனையைத் தகுந்த முறையில் கௌரவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
பாராட்டு, வாழ்த்துக்கள்
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்துக்கு பெருமை தேடி தந்துள்ளார்
அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவரது வெற்றி தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்." என்று முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார்.
==============