

சட்டவிரோத சூதாட்டம் தடை
ED on Suresh Raina Shikhar Dhawan Assets Attached In Betting App Case : நமது நாட்டில் சட்டவிரோத சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. 'மொபைல் போன்' புழக்கத்துக்கு பின், சூதாட்ட செயலிகள் அதிகரித்துள்ளன. இந்த செயலிகள் மூலம், மக்களையும், முதலீட்டாளர்களையும் ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன. எனவே, அது தொடர்பான விசாரணையை அமலாக்கத் துறை முடுக்கிவிட்டுள்ளது.
'1 எக்ஸ் பெட்' சூதாட்ட செயலி
அந்த வகையில், '1 எக்ஸ் பெட்' என்ற சூதாட்ட செயலி, சமூக ஊடகங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக மக்களை சூதாட்டத்தில் ஈடுபட வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வீரர்களும், இந்த செயலியை விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள், விளம்பரத்தின் போது, ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கையில் பங்கேற்றனரா என்பது குறித்தும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஷிகார், சுரேஷ் ரெய்னாவிடம் விசாரணை
இந்த செயலியை விளம்பரப்படுத்தியது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகார் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியிருந்தனர்.
சொத்துக்கள் முடக்கம்
இந்நிலையில் ஆன்லைன் செயலி சூதாட்ட வழக்கில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகார் தவானுக்கு சொந்தமான ரூ.11.14 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
சுரேஷ் ரெய்னாவின் ரூ.6.64 கோடி சொத்துகளும், ஷிகார் தவானின் ரூ.4.50 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
சுரேஷ் ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக விளையாடி பல்வேறு போட்டிகளில் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். இந்திய அணிக்காக இவர் 226 ஒரு நாள் போட்டிகளிலும், 18 டெஸ்ட் போட்டிகளிலும், 78 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இவரை சென்னை அணியின் ரசிகர்கள் சின்ன தல என்று அன்புடன் அழைக்கிறார்கள். 38 வயதாகும் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
பிரபலங்களுக்கு பெரிய சிக்கல்
அமலாக்கத்துறை நடவடிக்கை சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவானுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் இன்னும் பல பிரபலங்கள் சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டம் சார்ந்த சட்டவிரோதமாக புரோமோஷன் செய்து பணம் வாங்கிய புகார் இன்னும் பலர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
=======