

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி, இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. 20 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் வங்கதேச அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் கொல்கத்தா, மும்பையில் நடைபெறுகிறது.
இந்தியாவில் விளையாட வங்கதேசம் எதிர்ப்பு
இந்நிலையில் இந்தியாவில் தங்களது அணிக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் அதனால் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால் வங்கதேசத்தின் குற்றச்சாட்டு மீது எந்தவித உண்மையும் இல்லை.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை
வங்கதேச அணிக்கு இந்தியாவில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என ஐசிசி தெரிவித்தது. போட்டி தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ளதால் அட்டவணை, பயண விவரங்களை மாற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டது.
வங்கதேசத்திற்கு ஐசிசி எச்சரிக்கை
மேலும் நேற்றைக்குள் (21-ம் தேதி) டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தங்களது முடிவை வங்கதேசம் அறிவிக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்படும் எனவும் ஐசிசி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஐசிசி ஆலோசனை
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.அப்போது வங்கதேச வாரியம் தரப்பில் வைக்கப்பட்டுள்ள போட்டி இடமாற்ற கோரிக்கை தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிர்ப்பு
இதில் 16 உறுப்பினர்களில் வங்கதேசம், பாகிஸ்தானை தவிர மற்ற அனைவரும் இடமாற்ற கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு கூடுதலாக ஒருநாள் அவகாசம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அட்டவணையில் மாற்றமில்லை - ஐசிசி
மேலும் இந்தியாவில் வங்கதேசத்துக்கு பாதுகாப்பில் குறைவில்லை என்றும் கடைசி நேரத்தில் போட்டிகளை மாற்ற முடியாது என்றும் ஐசிசி சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தச் சூழ்நிலையில் போட்டிகளை இடம் மாற்றுவது ஐசிசி-யின் புனிதத் தன்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். மேலும், உலக அரங்கில் ஐசிசியின் நடுநிலைத்தன்மைக்கு பாதகமாக அமையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியில் வங்கதேசம்
எனவே, திட்டமிடப்பட்ட அட்டவணையின் படி வங்கதேசம் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும். அல்லது வெளியேற வேண்டி இருக்கும்.
===========================