
ஆசிய கோப்பை கிரிக்கெட் :
India Defeat Bangladesh To Enters Asia Cup 2025 Final Match : ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் தகுதி பெற்றன.
இந்தியா - வங்கதேசம் மோதல் :
சூப்பர் 4 சுற்றில் 4 ஆவது ஆட்டமாக இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தது.
அபிஷேக் சர்மா அதிரடி :
தொடக்க வீரர் சுப்மன் கில் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ரன்கள் சேர்த்து அரைச்சதம் கடந்தார். 37 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இந்திய அணி 168 ரன்கள் குவிப்பு :
சிவம் துபே 2 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 5 ரன்களும், அக்சர் படேல் 10 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 168 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணி வெற்றி, இறுதிப் போட்டியில்... :
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர் தன்சித் அசன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த சைப் ஹசன் – பர்வேஸ் உசைன் இணை சிறப்பாக விளையாடி அணிக்கு நம்பிக்கை கொடுத்தது. பொறுப்புடன் பந்து வீசிய இந்திய வீரர்கள் ஒவ்வொரு விக்கெட்டாக வீழ்த்தினர். 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மேலும் படிக்க : Asia Cup: டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் சாதனை
அபிஷேக் சர்மா அசத்தல் ஆட்டம் :
நேற்று 5 சிக்சர்களை விளாசிய அபிஷேக் சர்மா. இதுவரை 22 போட்டியில் மொத்தம் 58 சிக்சர் அடித்தார். அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்களில். ரெய்னாவை (78ல் 58) பின்தள்ளி, 7 வது இடத்துக்கு முன்னேறினார். முதல் 3 இடத்தில் ரோகித் (205), சூர்யகுமார் (148), கோலி (124) உள்ளனர். சர்வதேச 'டி-20'ல் 25 அல்லது அதற்கும் குறைவான பந்தில் அதிக முறை அரைசதம் அடித்த வீரர்களில் அபிஷேக் (5) மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் சூர்யகுமார் (7), ரோகித் சர்மா (6) உள்ளனர். யுவராஜ் சிங் (4), ராகுல் (3) 4, 5வது இடத்தில் உள்ளனர்.
முஸ்தபிஜுர் 150 விக்கெட்கள் :
சூர்யகுமாரை அவுட்டாக்கிய முஸ்தபிஜுர், சர்வதேச 'டி-20'ல் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வங்கதேச பவுலர்களில் சாகிப் அல் ஹசனை (149) முந்தி, முதலிடம் பிடித்தார்.
====================