பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பை : வரலாறு படைத்த இந்திய பெண்கள்
பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட்
India defeats Nepal to Win inaugural Blind Women's T20 World Cup 2025 : பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா நாடுகளை சேர்ந்த அணிகள் 21 லீக் போட்டிகளில் விளையாடின. இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் - நேபாளமும் தகுதி பெற்றன.
இந்தியா - நேபாளம் பலப்பரீட்சை
இலங்கை தலைநகர் கொழும்புவில் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பந்துவீசிய இந்திய அணி நேபாளத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சால், நேபாள அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தியாவுக்கு 115 ரன்கள் இலக்கு
115 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. முதல் 10 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்து வெற்றியைக் உறுதி செய்தது.
44 ரன்கள் குவித்த பூலா சாரன்
தொடக்க வீராங்கனை பூலா சாரன் (Phula Saren) 27 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் 13-வது ஓவரிலேயே இந்தியா இலக்கை எட்டிப் பிடித்துக் கோப்பையைக் கைப்பற்றியது. பூலா சாரன் 'ஆட்டநாயகி' விருதையும் வென்றார். மற்றொரு வீராங்கனை கருணா 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
வலிமையான இந்திய அணி
இந்த வெற்றி குறித்துப் பேசிய இந்திய அணி கேப்டன் தீபிகா, கோப்பையை வென்றது மிகவும் பெருமை அளிக்கிறது. இதற்காக அணி முழுவதும் கடுமையாக உழைத்தோம். இது ஒரு மிகப்பெரிய வெற்றி. எங்கள் அணி மிகவும் வலிமையானது; எங்களைக் கண்டு மற்ற அணிகள் பயப்படுகின்றன” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தோல்வியே காணாமல் பயணம்
இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணி ஒரு தோல்வியைக் கூடச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லீக் சுற்றுகளில் இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தற்போது இறுதிப் போட்டியில் நேபாளத்தையும் வீழ்த்தி, தோல்வியே காணாத அணியாக மகுடம் சூடியுள்ளது.
முதல் முறையாக நடத்தப்பட்ட பார்வையற்றோருக்கான டி20 மகளிர் உலகக் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது

