New Chandigarh Test : இந்தியா இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி : ஆப்கனை சுருட்டிய மானவ், வாஷிங்டன் சுந்தர்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
Indian team won the first Test against Afghanistan by an innings and 300 runs
Indian team won the first Test against Afghanistan by an innings and 300 runsgoogle
1 min read

ஆப்கன் அணி சுற்றுப் பயணம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

564 ரன்கள் குவித்தது இந்தியா

அதன்படி முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாபின் சண்டிகர் நகரில் சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 127 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசினர். சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பந்த் தலா 81 ரன்கள் சேர்த்தனர்.

விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆப்கன்

பின்னர் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் ஆப்கன் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்தனர்.

அப்துல் மாலிக் 16, செதிக்குல்லா 17, குர்பாஸ் 12, ஹஸ்மத்துல்லா 20, அஃப்சர் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது.

இன்று காலை இந்த போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. மதிய உணவு நேரத்துக்கு முன்பாகவே எஞ்சிய 5 விக்கெட்டுகளையும் ஆப்கானிஸ்தான் இழந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா, 60 ரன்கள் எடுத்திருந்தார்.

மானவ் சுதர் 6 விக்கெட்டுகள்

இதில் இந்திய அணி சார்பில் பந்து வீசிய அறிமுக வீரர் மானவ் சுதர், 22 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா 3, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் கைப்பற்றினர்.

மானவ் சுதர் சாதனை

இந்த நூற்றாண்டில் அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் 5+ விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய பவுலராக மானவ் சுதர் உள்ளார். அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்களில் அவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

ஆப்கன் ஃபாலோ-ஆன்

முதல் இன்னிங்ஸில் 412 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆட்டமிழந்தது. இதனால் அந்த அணிக்கு ஃபாலோ-ஆன் வழங்கியது இந்திய அணி. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது.

இந்தியா அபார பந்துவீச்சு

இதிலும் இந்திய வீரர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி, ஆப்கனை நிலைகுலைய வைத்தனர். தொடக்க ஆட்டக்காரர் மட்டுமே 42 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களோடு வெளியேறினர்.

வாஷிங்டன் சுந்தர் அசத்தல்

இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வாஷிங்டன் சுந்தர். அவர் 4 விக்கெட்டுகளை சாய்க்க, குல்தீப் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் காரணமாக 112 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்.

இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

================

logo
Thamizh Alai
www.thamizhalai.in