

இந்தியா - இலங்கை டி20
Indian women's cricket team completed a clean sweep against Sri Lanka in the five-match T20 2025 series : இந்தியா வந்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுடன் மோதியது. முதல் நான்குபோட்டியிலும் ஏற்கனவே வெற்றி பெற்று இருந்த இந்தியா கோப்பையை வென்றது.
இலங்கை அணி பீல்டிங்
ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் நடந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக 'டாஸ்' வென்ற இலங்கை பெண்கள் அணி கேப்டன் சமாரி, மீண்டும் பீல்டிங் தேர்வு செய்தார். துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ரேணுகாவுக்கு ஓய்வு தரப்பட்டது. ஸ்னே ராணா அணிக்கு திரும்பினார்.
ஏமாற்றம் தந்த ஷைபாலி
இந்திய அணிக்கு ஷைபாலி, கமலினி ஜோடி துவக்கம் கொடுத்தது. கடந்த 3 போட்டியில் 'ஹாட்ரிக்' அரைசதம் அடித்த ஷைபாலி, இம்முறை 5 ரன்னில் அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமலினி 12 ரன் மட்டும் எடுத்தார். ஹர்லீன் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
திணறிய இந்திய அணி
அடுத்து வந்த ரிச்சா கோஷ் (5), தீப்தி சர்மா (7) என இ ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இந்திய அணி 10.4 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் என நிலையில் திணறியது.
கேப்டன் ஹர்மன்பிரீத் அரைசதம்
ஆனால், அடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அமன்ஜோத் கவுர் இணைந்தனர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. சமாரி ஓவரில் (15) அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்த ஹர்மன்பிரீத் கவுர், வேகமாக ரன்களை குவித்து, 35 பந்தில் அரைசதம் எட்டினார்.
தொடர்ந்து இனோகோ வீசிய 16வது ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி என விளாசினார் ஹர்மன்பிரீத் கவுர். ராஷ்மிகா பந்தில் சிக்சர் அடித்த அமன்ஜோத் கவுர், 21 ரன்னில் அவுட்டானார். 43 பந்தில் 68 ரன் எடுத்த ஹர்மன்பிரீத் கவுர், கவிஷா பந்தில் வீழ்ந்தார்.
இந்திய அணி 175 ரன்கள்
போட்டியின் 20 வது ஓவரை மாதரா வீசினார். இதில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உட்பட 20 ரன் விளாசினார் அருந்ததி. இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்தது. அருந்ததி (27), ஸ்னே ராணா (8) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை நிதான ஆட்டம்
அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி (2) ஹாசினி ஜோடி சுமார் துவக்கம் தந்தது. அரைசதம் அடித்த இமேஷா (50), அமன்ஜோத் பந்தில் வீழ்ந்தார். நிலாக்சிகா (3), கவிஷா (5) நிலைக்கவில்லை.
42 பந்தில் 65 ரன் எடுத்த ஹாசினி, ஸ்ரீசரணி பந்தில் போல்டானார். ஹர்ஷித்தா (8), கவுஷினி (1) கைவிட, இலங்கை அணி 20 ஓவரில் 160/7 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
டி20 கமலினி அறிமுகம்
இந்திய அணி விக்கெட் கீப்பர், துவக்க வீராங்கனை கமலினி 17. சர்வதேச 'டி-20'ல் அறிமுக வாய்ப்பு பெற்றார். இந்தியாவின் 90 வது 'டி-20' வீராங்கனையான இவருக்கு, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்பெஷல் நீல நிற தொப்பி வழங்கினார்.
மூன்றாவது இடம்
சர்வதேச 'டி-20'ல் அதிக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனைகளில் ஹர்மன்பிரீத் கவுர் (14), ஜெமிமா (14), ஷைபாலியை (14) முந்தி, மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் ஸ்மிருதி (32), மிதாலி ராஜ் (17) உள்ளனர்.
தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி கோப்பையை தட்டிச் சென்றது.
====================