

தென்னாப்பிரிக்கா- பாகிஸ்தான் மோதல்
Kagiso Rabada Test Record : உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், தற்போது 2வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில்(Rawalpindi Cricket Stadium) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 333 ரன்கள் எடுத்தது.
ககிசோ ரபாடாவால் திருப்பம்
பின்னர் இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 306 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. அப்போது செனுரன் முத்துசாமி - ரபாடா கூட்டணி(Kagiso Rabada) இணைந்தது. கடைசி பேட்ஸ்மேனாக ரபாடா வந்ததால், பாகிஸ்தான் வீரர்கள் உற்சாகமுடன் இருந்தனர். ஆனால் அடுத்த 10 ஓவர்களில் ரபாடா பந்தை துவம்சம் செய்து நாளா பக்கமும் அனுப்பினார். இதனால், தோல்வி நிலையில் இருந்த தென்னாப்பிரிக்க அணி, நிமிர்ந்து எழுந்து அடுத்த கட்டத்திற்கு சென்றது.
வெற்றி வாகை சூடிய தென்னாப்பிரிக்கா
இந்நிலையில், சிறப்பாக ஆடிய ரபாடா சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரைசதத்தை விளாசி தள்ளினார். மறுபக்கம் முத்துசாமியும் ரன்களை குவிக்க, தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் மளமளவென 400 ரன்களை கடந்தது.
மேலும் படிக்க : அறிமுக போட்டியிலேயே ஆசியாவில் முதலிடம்? அசத்தும் பந்து வீச்சாளர்!
ககிசோ ரபாடாவின் சாதனை
பாகிஸ்தான் அணி முன்னிலையுடன் பேட்டிங்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ரபாடாவின் அதிரடி, ஆட்டத்தை தலைகீழாக திருப்பியது. இறுதியாக 61 பந்துகளில் 4 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 71 ரன்கள்(Kagiso Rabada Test Runs) எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக ரபாடா 119 ஆண்டு கால சாதனையை முறியடித்து மாபெரும் வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் 11 பேட்ஸ்மேனாக ரபாடா அடித்துள்ள 71 ரன்கள், டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆண்டர்சன், ஆஸ்டன் அகர், ஜாகீர் கான், டினோ பெஸ்ட், ஆகியோருடன் ரபாடா பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.