

FIFA WC 2026 மெக்சிகோ - ஈக்வடார்
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ - ஈக்வடார் அணிகள் மோதின.
மெக்சிகோ முதல் கோல்
22வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் வீரர் ரொபர்ட்டோ ஆல்வராடோ கொடுத்த பாஸை பெற்ற ஜூலியன் குவினோன்ஸ் பாக்ஸின் விளிம்பிலிருந்து வலுவாக அடித்த ஷாட் கோல் வலையை துளைத்தது.
மெக்சிகோ 2வது கோல்
இதனால் மெக்சிகோ 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 9-வது நிமிடத்தில் மெக்சிகோ அணி 2-வது கோலை அடித்தது.
31-வது நிமிடத்தில் ஜூலியன் குவினோன்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற மெக்சிகோவின் சீனியர் நட்சத்திர வீரரான ரவுல் ஜிமினெஸ் பந்தை மிக நேர்த்தியாக கோல் வலைக்குள் திணித்தார்.
கோல் அடிக்க ஈக்வடார் முயற்சி
முதல் பாதி ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஈக்வடார் அணி 2வது பாதியில் கோல் அடிக்க பெருமுயற்சி செய்தது.
பந்தை அதிக நேரம் தங்கள் வசம் வைத்துக்கொண்டு பதிலடி கொடுக்க கடுமையாக முயன்றது. அந்த அணியின் வீரர் ஜான் யெபோவா இலக்கை நோக்கி அடித்த ஷாட் கோல் போஸ்ட்டில் பட்டுத் திரும்பியது.
மெக்சிகோ சிறப்பான தடுப்பாட்டம்
மெக்சிகோவின் பலமான தற்காப்பு ஆட்டம் மற்றும் கோல்கீப்பர் ரவுல் ரான்ஜெலின் சிறப்பான செயல்பாடு காரணமாக ஈக்வடாரால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை.
ரவுண்ட் ஆஃப் 16ல் மெக்சிகோ
கடைசி வரை போராடிய ஈக்வடார், கோல் அடிக்காமல் துவண்டு போனது. இதையடுத்து, மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது.
40 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
மெக்சிகோ அணி கடைசியாக 1986-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் பல்கேரியாவிற்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.
அதன் பிறகு அந்த அணி 1994 முதல் 2018 வரையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் 7 முறை நாக் அவுட் சுற்றில் தோல்வி அடைந்து
அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறி இருந்தது. 40 ஆண்டுகள் கழித்து இப்போது நாக்-அவுட் வெற்றியை சுவைத்துள்ளது
====