இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : இந்தியா வரலாற்று வெற்றி

2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 336 ரன்களில் வீழ்த்தி இந்தியா, அசத்தலான வெற்றியை பெற்றது.
Second Test India Beats England
India Beats England by 336 runs in Second Testhttps://x.com/BCCI
1 min read

2வது டெஸ்ட் போட்டி :

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் சச்சின் டிராபி தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

பர்மிங்காம் நகரில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் எடுத்தன.

இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு :

இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்த போது, ஆட்டத்தை முடித்து கொள்வதாக, இந்தியா டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 180 ரன்கள் முன்னிலை உடன் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.

நான்காம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்ததே அதற்கு காரணம்.

ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு :

5ம் நாளான நேற்று, மழை காரணமாக ஆட்டம் சற்று தாமதமாகவே தொடங்கியது. ஆலி போப் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரது விக்கெட்டுகளை ஆகாஷ் தீப் தொடக்கத்திலேயே கைப்பற்றினார். 6வது விக்கெட்டுக்கு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இணைந்து 70 ரன்கள் எடுத்தனர்.

மதிய உணவுக்கு பிறகு கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோரது விக்கெட்டை இந்தியா கைப்பற்றியது. டங் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். இறுதியாக கார்ஸ் விக்கெட்டை ஆகாஷ் தீப் வீழ்த்தினார். சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இந்திய பந்து வீச்சாளர்கள் வசப்படுத்தினார்கள்.

271 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து :

ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 68.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இந்தியா 336 ரன்களில் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக கேப்டன் ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஜடேஜா, கே.எல்.ராகுல், ஆகாஷ் தீப் மற்றும் சிராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்தியாவின் முதல் வெற்றி :

எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாவுக்கு கிடைத்த இது முதல் வெற்றி இது. இந்த போட்டியில் ஷுப்மன் கில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 430 ரன்கள் எடுத்தார். சிராஜ் 7 விக்கெட்டுகள் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகள் என இந்தப் போட்டியில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 5 போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. டெஸ்ட் தொடரின் அடுத்த போட்டி வரும் 10ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in