

தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து மோதல்
South Africa vs New Zealand T20 World Cup Semi Final 2026 : சிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தோல்வியை சந்திக்காத தென் ஆப்பிரிக்கா
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாக வலம் வருகிறது. லீக் சுற்றில் 4 ஆட்டங்கள், சூப்பர் 8 சுற்றில் 3 ஆட்டங்கள் என தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது.
வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா
வலுவான டாப் ஆர்டர், நடுவரிசை பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பல்வேறு மாறுபாடுகளை கொண்டிருப்பது அணியின் பலமாக உள்ளது. பேட்டிங்கில் 175.16 ஸ்டிரைக் ரேட்டுடன் 268 ரன்கள் குவித்துள்ள எய்டன் மார்க்ரம் பவர்பிளேவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடியவராக உள்ளார்.
அதிரடி வீரர் மார்க்ரம்
நடப்பு தொடரில் 3 அரை சதங்கள் விளாசி உள்ள அவரது அதிகபட்ச ஸ்கோர் 86* ஆக உள்ளது. அவரிடம் இருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும்.
வேகப்பந்து வீச்சில் காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, மார்கோ யான்சன், கார்பின் போஷ் ஆகியோர் வலுவான செயல் திறனை வெளிப்படுத்தக்கூடியவர்கள்.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் 3 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்தது. தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தானுடன் மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்தானது.
நியூசிலாந்தும் வலுவான அணி தான்
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி கண்ட நிலையில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. எனினும் நிகர ரன் ரேட் காரணமாக பாகிஸ்தான் அணியை தொடரில் இருந்து வெளியேற்றி அரை இறுதி வாய்ப்பை பெற்றிருந்தது நியூஸிலாந்து அணி.
அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள்
டாப் ஆர்டரில் டிம் ஷெய்பர்ட், ஃபின் ஆலன் ஜோடி அதிரடி தொடக்கம் அமைத்துக் கொடுப்பவர்களாக உள்ளனர். ஆனால் நடுவரிசையில் கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் ஆகியோரிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்திறன் வெளிப்படவில்லை.
இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்படுவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
வலுவான பந்துவீச்சு
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறது. சுழலில் மிட்செல் சாண்ட்னர் நடப்பு தொடரில் ஓவருக்கு சராசரியாக 6.35 ரன்களையே விட்டுக் கொடுத்துள்ளார். மேலும் 9 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், கோல் மெக்கோன்சி ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும்.
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம்
நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன. போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்க முயற்சிக்கக்கூடும்.
தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 8-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 5 முறை மோதி உள்ளது. இதில் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க அணியே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
============