

உலகக் கோப்பை கால்பந்து
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை (ஜூன் 11) தொடங்குகின்றன.
கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து இந்தத் தொடரை நடத்துகின்றன.
இதுவரை அல்லாத அளவு 48 அணிகள் இந்த தொடரில் மோத உள்ளன. 104 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
'டிரையோண்டா' கால்பந்து
தலைசிறந்த கால்பந்து வீரர்கள், ஆக்ரோஷமான போட்டிகளை விட, இப்போது அதிகம் பேசப்படுவது பயன்படுத்தப்பட இருக்கும் அதிகாரப்பூர்வ பந்து தான்.
செயற்கை நுண்ணறிவு
புகழ்பெற்ற ஸ்பான்சர் நிறுவனமான அடிடாஸ் இம்முறை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 'டிரையோண்டா' (Trionda) என்ற புதிய ஸ்மார்ட் கால்பந்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
எலக்ட்ரானிக் கேஜெட்
இந்த 'டிரையோண்டா' கால்பந்து சாதாரண பந்துகளைப் போலல்லாமல், ஒரு எலக்ட்ரானிக் கேஜெட் போலவே செயல்படும் திறன் கொண்டது. இதன் வடிவமைப்பு தனித்துவமானது,
கால்பந்தில் சென்சார் சிப்
இது மிகக் குறைவான பேனல்களைக் (துண்டுகள்) கொண்டு தைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தின் நான்கு பேனல்களில் ஒன்றிற்குள் 500 ஹெர்ட்ஸ் (Hz) வேகமுடைய அதிநவீன மோஷன் சென்சார் சிப் பொருத்தப்பட்டுள்ளது.
பந்தின் சமநிலை காற்றில் மாறாமல் இருக்க, சென்சார் இல்லாத மற்ற பேனல்களிலும் சமமான எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சார்ஜ் செய்யப்படும் பந்து
இந்த பந்தை போட்டி தொடங்குவதற்கு முன்பு 90 நிமிடங்கள் சார்ஜ் செய்ய வேண்டும், அப்போதுதான் இது 6 மணி நேரம் வரை தடையின்றி இயங்கும்.
தரவுகளை துல்லியமாக தரும்
காற்றில் பந்து செல்லும் வேகம், அதன் திசை மற்றும் அது சுழலும் வேகம் ஆகியவற்றை இந்த சென்சார் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு நடுவர்களுக்கு தரவுகளை அனுப்பும்.
நடுவர்களுக்கு உதவும் ஏஐ கால்பந்து
கால்பந்து போட்டிகளில் ஆஃப்சைட் (Offside) அல்லது ஹேண்ட்பால் (Handball) போன்ற சவாலான முடிவுகளை எடுப்பதில் தற்போதைய 'வார்' (VAR) தொழில்நுட்பத்திலும் சில நிமிடங்கள் தாமதம் ஏற்படுகிறது.
இந்தத் தாமதத்தை முற்றிலுமாகத் தவிர்த்து, நடுவர்களின் வேலையை எளிதாக்கவே இந்த சென்சார் சிப் உதவுகிறது.
முப்பரிமாண டிஜிட்டல் தரவு
மைதானத்தைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் சென்சார்கள் வீரர்களின் நகர்வுகளைக் கண்காணித்து, அவர்களின் முப்பரிமாண (3D) டிஜிட்டல் அவதாரத்தை உருவாக்கும்.
கண் இமைக்கும் நேரத்தில் முடிவு
இந்தத் தரவுகளுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணையும் போது, மிகக் கடினமான முடிவுகளையும் நடுவர்கள் கண் இமைக்கும் நேரத்தில், துல்லியமாக எடுக்க முடியும்.
வரலாற்று பிழைகள் தவிர்ப்பு
இதன் மூலம் 1986ல் மரடோனா அடித்த சர்ச்சைக்குரிய 'ஹேண்ட் ஆஃப் காட்' (Hand of God) போன்ற வரலாற்றுத் தவறுகள் இனி நடக்காமல் தடுக்கப்படும்.
பந்தின் திசையை கண்காணிக்கலாம்
2010 உலகக்கோப்பையில் பயன்படுத்தப்பட்ட 'ஜாபுலானி' பந்து மிகவும் வழுவழுப்பாக இருந்ததால், அதன் திசையைக் கணிப்பது கோல்கீப்பர்களுக்கு சிரமமாக இருந்தது.
ஆனால், புதிய 'டிரையோண்டா' பந்தின் மேற்பரப்பு கோல்ஃப் பந்தைப் போல சற்று சொரசொரப்பாகவும், சிறிய பள்ளங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பந்து காற்றில் நிலைதடுமாறாமல் நேராகவும் வேகமாகவும் செல்ல உதவும்.
மூன்று நாடுகளை குறிக்கும் கால்பந்து
பந்தின் வெளிப்புற வடிவமைப்பு போட்டியை நடத்தும் மூன்று நாடுகளின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
வெள்ளை நிற பின்னணியில் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்களுடன் கனடாவின் 'மேப்பிள் இலை', மெக்சிகோவின் 'கழுகு' மற்றும் அமெரிக்காவின் 'நட்சத்திர' குறியீடுகள் இதில் அச்சிடப்பட்டுள்ளன.
நவீனமாகி விட்ட உலகக் கோப்பை
அதிநவீன தொழில்நுட்பமும், கலாச்சார ஒற்றுமையும் இணைந்த இந்த டிரையோண்டா கால்பந்து, 2026 உலகக்கோப்பையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.
=======================