

அதிரடி மன்னன் சேவாக்
இந்திய கிரிக்கெட்டில் 2000ம் ஆண்டு காலகட்டத்திலே டி20 பாணி ஆட்டத்தை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடிய அதிரடி காட்டியவர் வீரேந்திர சேவாக்.
சேவாக் மகன் ஆர்யவீர்
அதிரடி மன்னனான இவரது பேட்டிங்கிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவரது மகன் ஆர்யவீர் தற்போது இன்னொரு சேவாக்காக உருவெடுத்து வருகிறார்.
யூ.19 அணியில் ஆர்யவீர்
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி ஆசிய கோப்பைத் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய ஆர்யவீருக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆர்யவீர் அதிரடி ஆட்டம்
தந்தையைப் போல ஆர்யவீரும் தொடக்க வீரராக இந்த தொடரில் களமிறங்கினார். நேபாளத்திற்கு எதிரான முதல் போட்டியில் அதிரடி அரைசதம் விளாசி அனைவரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தார் ஆர்யவீர்.
மிரட்டலாய் ரன் குவித்தார்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக அல் அமீரகத்தில் நடந்த போட்டியில் ஆர்யவீர் மிரட்டலாக பேட் செய்தார். நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய ஆர்யவீர் களத்தில் நங்கூரமிட்ட பிறகு தந்தையைப் போல பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். 69 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர் 131 பந்துகளில் சதம் விளாசினார்.
168 பந்துகள் - 160 ரன்கள்
சதம் அடித்த பிறகு பேட்டிங்கில் வேகத்தை கூட்டினார். பவுண்டரியும், சிக்ஸரும் விளாச அடுத்த 30 பந்துகளில் 68 ரன்களை சேர்த்தார். உத்திஷ் சூரி வீசிய 38வது ஓவரில் மட்டும் 21 ரன்கள் விளாசினார்.
முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் எடுத்தது. ஆர்யவீர் சேவாக் 168 பந்துகளில் 17 பவுண்டரி 7 சிக்ஸருடன் 160 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இதையடுத்து, ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 50 ஓவர்களில் 239 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆர்யவீருக்கு குவியும் பாராட்டு
சேவாக் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தபோதிலும் அவருக்கு கால் நகர்வுகள் இல்லையென்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்படும்.
ஆனாலும், அவர் தனது பேட்டால் பவுண்டரி, சிக்ஸர் விளாசி அதற்கு பதிலடி தருவார். ஆனால், ஆர்யவீரிடம் கால்நகர்வுகள் மிகவும் நன்றாகவே இருப்பதாகவே பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த தொடரில் மட்டும் இதுவரை 3 போட்டிகளில் ஆடியுள்ள ஆர்யவீர் 252 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 25 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடங்கும்.
இன்னும் சில வருடங்களில் இந்திய அணியில் ஆர்யவீர் முக்கியமான வீரராக உருவெடுப்பார். 19 வயதான ஆர்யவீர் விரைவில் ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காகவும் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
===