

இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி
நடப்பு ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது சிக்சர்களும், பவுண்டரிகளும், குவிக்கும் ரன்களும் பேசுபொருளாகி வருகின்றன.
சூர்யவன்ஷிக்கான ரசிகர்கள் கூட்டமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவரது அபார ஆட்டத்தை பார்த்து, இந்தியா ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
சூர்யவன்ஷி அதிரடி
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 93 ரன்களை (10 சிக்ஸர், 7 பவுண்டரி) விளாசித் தள்ளினார்.
ஐபிஎல் தொடரில் 500 ரன்கள்
இதன்மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் குவித்த இளம் வயது வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி எட்டினார். 15 வயதிலேயே இந்த சாதனையை அவர் எட்டியுள்ளார்.
ரிஷப் பந்த் சாதனை முறியடிப்பு
இதற்கு முன்பு 2018-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ரிஷப் பந்த், குறைந்த வயதில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைக் குவித்த இளம் வீரர் என்ற சாதனையைச் செய்திருந்தார். அப்போது ரிஷப் பந்த்துக்கு வயது 20 ஆகும்.
ஸ்டிரைக் ரேட்டிலும் சாதனை
தற்போது அந்த சாதனையை, வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். மேலும், ஒரு ஐபிஎல் தொடரில் 500 அல்லது அதற்கு அதிகமான ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் அதிகமான ஸ்டிரைக் ரேட்டை (236.3) வைபவ் சூர்யவன்ஷி வசப்படுத்தி இருக்கிறார்.
ஸ்டிரைக் ரேட் வரிசையில் 2ம் இடத்தில் ஆந்த்ரே ரஸ்ஸல் (204.8 ) 3வது இடத்தில் அபிஷேக் சர்மா (202.0) , 4வது இடத்தில் நிக்கோலஸ் பூரன் (196.2) 5-வது இடத்தில் டிராவிஸ் ஹெட் (191.2) உள்ளனர்.
அதிக சிக்சர்கள் 2வது இடம்
மேலும் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் வரிசையில் 2-வது இடத்தை சூர்யவன்ஷி பிடித்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை அவர் 53 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். அவர் 2012 சீசனில் 59 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
===================