
உலகில் வலிமை வாய்ந்த கடற்படைகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது. போர் கப்பல்களில் இருந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டு போர் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட நமது நாட்டின் எல்லையை போர் கப்பல்களும், விமானங்களும் பாதுகாப்பாக நிர்வகித்து வருகின்றன.
ராணுவம், விமானப்படை, எல்லைப் பாதுகாப்பு படை, துணை ராணுவப் படைகள், காவல் பிரிவுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
கடற்படையில் முதல் பெண் விமானி :
இந்தநிலையில், இந்திய கடற்படையின் போர் விமானி பயிற்சிக்கு சப் லெப்டினன்ட் அஸ்தா பூனியா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். எதிர்காலத்தில் மிக் -29 கே மற்றும் கடற்படையின் ரபேல் போர் விமானங்களில் பறக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.
2013 முதல் அதிநவீன ஜெட் போர் பயிற்சி விமானமான ஹாக் 132 மூலம் ராணுவ விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முடித்த அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
சப் லெப்டினன்ட் அஸ்தா பூனியா, ‘Wings Of Gold' என்ற பாரம்பரியமிக்க விருதை பெற்றார்.
கடற்படையில் புதிய சகாப்தம் :
இதன் மூலம் கடற்படையின் போர் விமானங்களை பயிற்சி பெற உள்ள முதல் பெண் என்ற பெருமையை அஸ்தா பூனியாவுக்கு கிடைத்து உள்ளது. கடற்படையில் பெண் விமானிகள் என்ற புதிய சகாப்தமும் இதன்மூலம் தொடங்குகிறது.
ஏற்கனவே, கடலோர காவல்படை போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் இயக்க பெண் அதிகாரிகளை கடற்படை ஈடுபடுத்தி வருகிறது.
பல்வேறு நாடுகள் கடற்படை போர் விமானங்களை இயக்க பெண்களை அனுமதித்து வருகின்றன. 1990 முதல் அமெரிக்கா கடற்படை போர் விமானங்களை பெண்கள் இயக்கி வருகிறார்கள். இதேபோன்று, பிரிட்டன் கடற்படையிலும் பெண்கள் போர் விமானிகளாக உள்ளனர்.
அந்த வரிசையில் இந்தியாவும் இணைகிறது. கடற்படை போர் விமானங்களை இயக்கி சாதனை படைக்க இளம் பெண்கள் தயாராக உள்ளனர். இது நமது கடற்படையின் வலிமைக்கு மேலும் வலுச்சேர்க்கும்.
=====