
இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி :
US Tariff 25% on India Effect Date : அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து இறக்குமதி பொருட்கள் மீது கண் வைத்த ட்ரம்ப், கூடுதல் வரி விதிப்பை கொண்டு வந்தார். அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் அவர் பேசினாலும், கூடுதல் வரி விதிப்புகள் ஏற்றுமதி நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்த வரி ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வரும் என்று அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
வர்த்தக பங்காளி இந்தியா :
இந்த நிலையில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு(US Tariff on India Percentage) ஆகஸ்டு 1ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருவதாக, அவர் நேற்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். 2021-25ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 18 சதவீதம், இறக்குமதியில் 6.22 சதவீதம், பரஸ்பர வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்தே இருந்தது.
மிரட்டலை அமல்படுத்திய ட்ரம்ப் :
மிகப்பெரிய வர்த்தக பங்காளியான இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவு வரி விதித்து வருகிறது என்பது ட்ரம்பின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. எனவே இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார். இந்தநிலையில், பரஸ்பர வரி என்ற போர்வையில் கூடுதல் வரி விதிப்பை அவர் கொண்டு வந்துள்ளார்.
ரஷ்யா நட்பால் கடுப்பான ட்ரம்ப் :
ட்ரம்பின் இந்த பரஸ்பர வரி விகிதங்களுக்கு உலக நாடுகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதும், தன்னுடைய முடிவில் இருந்து அவர் மாறவே இல்லை. உக்ரைன் போருக்கு முன்பு ரஷியாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 0.2 சதவீதமாக இருந்தது. ஆனால், இப்போது அது 30 முதல் 40 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. அந்தவகையில் சீனாவுக்குப்பின் அதிக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. எனவே இந்தியாவை நேரடியாகவே மிரட்டி வந்த டிரம்ப், யாரும் எதிர்பாராத வகையில் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை கொண்டு வந்து இருக்கிறார்.
வரி விதிப்பில் தெளிவில்லாத சூழல் :
டிரம்ப் அறிவித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி, ஏற்கனவே இருக்கும் 10 சதவீத அடிப்படை வரியுடன் சேர்த்து விதிக்கப்படுமா? அல்லது கூடுதலாக விதிக்கப்படுமா? என்பதில் தெளிவு இல்லாத நிலை உள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் அமலாக்கம் செய்யப்படும் இந்த 25% வரி மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்கள், வைரம், தங்க நகைகள், ஆடைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், வாகனங்கள் மற்றும் இரும்பு, பித்தளை பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரிவிதிப்பில் ட்ரம்ப் கெடுபிடி :
முன்னதாக, கனடாவுக்கு 35 சதவீதமும், அல்ஜீரியா, இலங்கை மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு 30 சதவீத வரியும், புரூணே, லிபியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீதமும், பிலிப்பின்ஸுக்கு 20 சதவீதமும் டிரம்ப் அதிரடியாக வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.
=============