

3-Day Menstrual Leave for Schoolgirls: Kerala Government's Bold Initiative!
கேரளத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், மூத்த தலைவர் வி.டி.சதீசன் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
புதிய அரசின் கொள்கை விளக்கம்
இதனைத் தொடர்ந்து, புதிய அரசின் கொள்கை விளக்கங்கள் மற்றும் மகளிர் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் குறித்த ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரை தற்பொழுது வெளியாகியுள்ளது.
‘மாதவிடாய் கண்ணியம்’ திட்டம்
மாணவிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் 'மாதவிடாய் கண்ணியம்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பள்ளி மாணவிகளுக்கு மாதம் தோறும் 3 நாட்கள் வரை மாதவிடாய் விடுப்பு வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்பு
மேலும், மாணவிகள் விடுப்பு எடுக்கும் நாட்களில் விடுபடும் பாடங்களை ஈடு செய்யும் வகையில், வார இறுதி நாட்களில் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட உள்ளது.
பணிபுரியும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்
மகப்பேறு நலச் சட்டம் 1961-இன் கீழ், 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் போன்றவற்றில் தரமான குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.
சம ஊதியம் மற்றும் ஓய்வறைகள்
பணியிடங்களில் பெண்களுக்கு சம ஊதியம் உறுதி செய்யப்படும். அத்துடன், அனைத்து நகரங்களிலும் பெண்களுக்கென அதிநவீன ஓய்வறை வசதிகள் உருவாக்கப்பட்டு, அமைப்புசாரா துறைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.
’தத்தெடுப்பு’ குறித்த விழிப்புணர்வு
ஆதரவற்ற குழந்தைகள் இல்லாத மாநிலமாக கேரளாவை மாற்றும் நோக்கில், குழந்தைகளைத் தத்தெடுப்பதை ஊக்குவிக்கும் சிறப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும்.
'இந்திரா வாக்குறுதிகள்' மற்றும் நிதி நிலைமை
ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் வாக்குறுதிகளின்படி, ஜூன் 15 முதல் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இலவச மருத்துவக் காப்பீடு
மேலும், மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீடு போன்ற நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
விரைவில் 'வெள்ளை அறிக்கை'
மாநிலத்தின் கடன் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து மக்கள் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் விரைவில் 'வெள்ளை அறிக்கை' ஒன்று வெளியிடப்படும் என்றும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசின் பல்வேறு திட்டங்கள்
இதுதவிர, கேரளாவை துறைமுகங்கள் சார்ந்த ஒருங்கிணைந்த மையமாக மாற்றுவதற்கும், போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகச் சட்டம், விழிப்புணர்வு, மறுவாழ்வு ஆகிய முப்பரிமாண உத்திகளைக் கையாள்வதற்கும் புதிய அரசு திட்டமிட்டுள்ளது.
=====