
1975 ஆக.15ல் ரிலீசான ஷோலே :
1975ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று ஷோலே பணம் வெளியானது. ரமேஷ் சிப்பி இந்தப் படத்தை இயக்கி இருக்க, அவரது தந்தை ஜி.பி. சிப்பி 3 கோடியில் படத்தை தயாரித்து இருந்தார். ரிலீசான முதல் நாள் வந்த விமர்சனங்கள் இருவரையும் கலவரத்தில் ஆழ்த்தியது. ஆனால், 10 நாட்களில் நிலைமை தலைகீழானது. பாராட்டுகள் வரவர, தியேட்டர்களில் கூட்டம் ஆலைமோதியது. பொதுமக்கள் மக்கள் சாதி / மதம் / மொழி வித்தியாசம் இன்றி, குடும்பம் குடும்பமாக பார்த்ததால், "ஷோலே " குடும்ப படமாக வெற்றியை ஈட்டியது.
பாலிவுட்டை புரட்டி போட்ட ஷோலே :
இந்தி திரையுலகமே ஷோலோவுக்கு முன், ஷோலேவுக்கு பின் என மாறியது என்றால், படத்திற்கு கிடைத்த வரவேற்பை புரிந்து கொள்ளலாம். "ஷோலே"க்கான ஐடியா 1971 ல் சலீம் - ஜாவேத் எழுத்தாள இரட்டையர்களுக்கு தோன்றியது. அந்த ஆண்டு அவர்கள் பணி புரிந்த "HAATI MERE SAATHI "வெளியாகி BLOCKBUSTER ஆனது.
தன்னிகரற்ற படம் ஷோலே :
பல்வேறு படங்களில் இருந்து காப்பி அடித்த படம் ஷோலே என்று விமர்சிக்கப்பட்டாலும், அதை கதை, வசனம் மூலம் தன்னிகரற்ற படமாக்கியது சலீம் - ஜாவேத் ஜோடி. தொடர் சர்ச்சைகளுக்கு நடுவே தான் ஷூட்டிங் நடந்தது. டப்பிங் சமயத்தில் வில்லன் அம்ஜத்கான் குரல் கப்பர் சிங் கேரக்டருக்கு ஏற்றதாக இல்லை என்று எதிர்ப்பு கிளம்ப, ஆனால், அம்ஜத் குரலே அதுவே படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது. குரல், பயங்கர சிரிப்பு, வசன உச்சரிப்பில், வில்லனாகவே வாழ்ந்து காட்டி இருந்தார் அம்ஜத். "ஷோலே " பார்த்த பெரும்பாலோர், அம்ஜத் கான்-அமிதாப் -சஞ்சீவின் நடிப்பை பாராட்டினர். "ஷோலே " வின் ஆன்மா என்றால் அது தர்மேந்திரா தான்.
ஷோலே படத்தின் கதை :
ராம்கட் எனும் கிராமத்தில், "ஷோலே " கதை நிகழ்கிறது. அந்த ஊர் டாக்கூரான சஞ்சீவ் குமார், தன்னுடைய விதவை மருமகள் ஜெயா பாதுரியுடன் வசிக்கிறார். தான் போலீஸ் அதிகாரியாக இருந்த போது கைது செய்த இரண்டு திருடர்களான தர்மேந்திரா, அமிதாப் பச்சனை அவர் தேடுகிறார். அதற்கு காரணம் கிராமத்தை அச்சுறுத்தும் கொள்ளைக் கூட்டத் தலைவன் கப்பர் ஸிங்கை (அம்ஜத் கான் ) உயிருடன் பிடிக்குற துணிச்சல் இவர்களுக்கு இருப்பதாக அவர் நம்புகிறார்.
அவர் எதிர்பார்த்தது போலவே இரண்டு பேரும் ராம்கட்-க்கு வருகிறார்கள். குதிரை வண்டி ஓட்டும் ஹேமா மாலினி மீது தர்மேந்திராவும் , விதவை ஜெயா பாதுரி மீது பச்சனும் காதல் கொள்ள படம் விறுவிறுப்புடன் நகர்கிறது. "ஷோலே " வின் ஒளிப்பதிவாளர் DWARKA DIVECHA.
ஒளிப்பதிவில் கலக்கிய திவேசா :
வேகமாக ஓடுற குதிரைகள், ரயில், ராம்கட் கிராமத்தின் செட், கொள்ளையர் கூடாரம், ஹெலன் நடனம், ரயில் சண்டைக்காட்சி, கிளைமாக்ஸ் என எல்லா இடத்திலும் புதுவித அனுபவத்தை ஏற்படுத்தி, ரசிகர்களை பிரமிப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றார் ஒளிப்பதிவாளர் DWARKA DIVECHA. வெளிநாட்டு படங்களை பார்க்காதவர்களுக்கு ஷோலே நிச்சயம் ஒரு ஹாலிவுட் படம் தான்.
இன்னொரு ஹீரோ எடிட்டிர் ஷிண்டே :
"ஷோலே " படத்தில் கண்ணுக்கு தெரியாத இன்னொரு ஹீரோ என்றால், அது எடிட்டர் M.S.SHINDE தான். 3 லட்சம் அடியில் படமாக்கப்பட்ட "ஷோலே " வை 21,000 அடியாக சுருக்கி விறுவிறுப்பை கூட்டிய வெற்றி நாயகன். சென்சார் கைபட்டதால், படம் 18,000 அடியாக குறைந்து, சக்கைபோடு போட்டது.
பாடலாசிரியர் ஆனந்த் பக்ஷி :
பாடல்களால் காவியம் படைத்தார் ஆனந்த் பக்ஷி. ஆர்.டி.பர்மனின் இசையில் பாடல்கள் பிரமாதமாக அமைந்தன. நட்பை கொண்டாடும் பாட்டென்றால்..."YE DOSTI .."தான்! ஐட்டம் ஸாங் என்றால். "MEHBOOBA..."தான்! மற்ற பாடல்களையும் பாடாதவர்களே இல்லை என்று கூறலாம்.
டிவி ஒளிபரப்பிலும் சாதனை :
ரிலீஸான 100 தியேட்டர்களில், 25 வது வெள்ளி விழா வாரம் கொண்டாடிய முதல் & கடைசி இந்திய படம் "ஷோலே" .
" ஷோலே" பம்பாய் மினர்வா தியேட்டர்ல, தொடர்ந்து 5 வருடங்கள் ஓடியது.
"ஷோலே" ரிலீஸாகி 21 ஆண்டுகள் கழித்து, முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது, மொத்த இந்தியாவும் ஒன்றாக சேர்ந்து பார்த்தது பெரிய சாதனை தான். இந்தி மட்டுமல்ல இந்திய மொழிகளில் இதுவரை பல்லாயிரக் கணக்கான படங்கள் வந்தாலும், வந்த வண்ணம் இருந்தாலும், ஷோலேவுக்கான கிரேஸ் இன்றும் குறையவில்லை. என்றும் குறையாது என்பதுதான் தனிச்சிறப்பு