27 ஆண்டுகள் முயற்சி, 26 முறை தோல்வி : 59 வயதில் அரசுப் பள்ளி ஆசிரியரான உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நபர்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயது விஜய் குமார் சர்மா 27 ஆண்டுகள் முயன்று 59 வயதில் அரசுப் பள்ளி ஆசிரியராக தேர்வாகியுள்ளார்.
59-Year-Old UP Man Achieves Government Teacher Dream After 27 Years
59-Year-Old UP Man Achieves Government Teacher Dream After 27 Yearssource:google
1 min read

59-Year-Old UP Man Achieves Government Teacher Dream After 27 Years

தோல்வியைக் கண்டு அஞ்சாமல் 27 ஆண்டு கால முயற்சி

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 59 வயதான விஜய் குமார் சர்மா, சுமார் 27 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சித்து, தனது 59 வயதில் அரசுப் பள்ளி ஆசிரியராகத் தேர்வாகி சாதனை படைத்து அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மனிதராக மாறியுள்ளார்.

1999-ஆம் ஆண்டு முதல் அரசு ஆசிரியர் பணிக்காகத் தேர்வு எழுதி வந்த இவர், சாப்ளி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக சேரவுள்ளார்.

26 முறை தோல்வியடைந்தும் தளராத நம்பிக்கை

தனது அரசுப் பணி கனவுக்காகத் தொடர்ந்து படித்து வந்த விஜய் குமார் சர்மா, இதுவரை TGT எழுத்துத் தேர்வில் 6 முறையும், PGT தேர்வில் 4 முறையும் தேர்ச்சி பெற்றுள்ளார். சுமார் 8 முறை நேர்காணல் வரை சென்றும் இறுதிப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

இருப்பினும், தோல்விகளைக் கண்டு சோர்ந்துபோகாமல் தொடர்ந்து தேர்வு எழுதி வந்துள்ளார். இம்முறை தேர்வில் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டதால், தகுதியின் அடிப்படையில் அவர் தேர்வாகியுள்ளார்.

தனியார் பள்ளியில் 26 ஆண்டுகள் பணி

அரசுத் தேர்வுக்கு ஆயத்தமாகும் அதே வேளையில், தன் குடும்பத்தைக் காப்பாற்ற கடந்த 26 ஆண்டுகளாகத் தனியார் பள்ளிகளில் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

தினமும் 10 கி.மீ தூரம் மிதிவண்டியில் சென்று கற்பித்து வந்த இவர், பகலில் மாணவர்களுக்குப் பாடம் நடத்திவிட்டு இரவில் போட்டித் தேர்வுகளுக்கும் படித்து வந்துள்ளார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பணி நியமன ஆணை வழங்கினார்

லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கையால் விஜய் குமார் சர்மா தனது பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்டார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு பெறுவதற்கான வயது 62 என்பதால், இவருக்கு இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே சேவை செய்யக் காலம் உள்ளது. இருப்பினும், தனது வாழ்நாள் கனவு நனவானது மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

============

logo
Thamizh Alai
www.thamizhalai.in