பிகார் தேர்தலில் 64% வாக்குகள் பதிவு : 11ம் தேதி 2ம் கட்ட தேர்தல்

பிகாரில் முதற்கட்ட தேர்தலில், 64% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
64.46% of the votes were cast in the first phase of elections in Bihar
64.46% of the votes were cast in the first phase of elections in Bihar
2 min read

பிகார் முதற்கட்ட தேர்தல்

Bihar elections Phase 1 voting 64.46% voter turnout : 243 உறுப்பினர்களை கொண்ட பிகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 122 பெண்கள் உட்பட 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

NDA - INDIA கூட்டணி போட்டி

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 48, ஐக்கிய ஜனதா தளம் 57, எல்ஜேபி (ஆர்)13, ஆர்எல்எம் 2, எச்ஏஎம் 1 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 72, காங்கிரஸ் 24, விஐபி 6, கம்யூனிஸ்ட் கட்சிகள் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தனித்து களத்தில் ஜன் சுராஜ்

இரு அணிகளை தவிர்த்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. பிஹார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, மெகா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் 16 அமைச்சர்கள் விஐபி வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

நிதிஷ்குமார் வாக்களித்தார்

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில் மொத்தம் 3.75 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர். அவர்களுக்காக 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தலைநகர் பாட்னா அடுத்த பக்தியார்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் நிதிஷ் குமார் வாக்களித்தார்.

லாலு பிரசாத் வாக்களித்தார்

ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் தனது மனைவி ரப்ரி தேவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று பாட்னாவின் கால்நடை மருத்துவக் கல்லூரி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். ஆர்ஜேடி மூத்த தலைவரும், மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவும் தனது வாக்கினை பதிவு செய்தார்.

முதல்வர் பதவி - தேஜ் பிரதாப் ஆசை

லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜன் சக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். பாட்னாவில் வாக்களித்த அவர், ‘‘எனக்கு முதல்வர் பதவி கிடைத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்’’ என்று கூறினார். ‘தனது இரு மகன்களும் தேர்தலில் வெற்றிவாகை சூடுவார்கள் ‘ என்று லாலுவின் மனைவி ரப்ரி தேவி தெரிவித்தார்.

மீண்டும் NDA ஆட்சி - சிராக் பாஸ்வான்

மத்திய அமைச்சரும், எல்ஜேபி (ஆர்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான், ககாரியா நகரில் வாக்களித்தார். ‘‘பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். மெகா கூட்டணி தோல்வியை தழுவும்’’ என்று அவர் கூறினார்.

கூடுதலாக வாக்குப்பதிவு - 64.46%

ஒருசில அசம்பாவித சம்பவங்கள் தவிர்த்து, பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 64.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. கடந்த 2020-ல் முதல் கட்ட தேர்தலின்போது 56.9 சதவீத வாக்குகள் பதிவாகின. அதைவிட தற்போது 7.56 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.

14ம் தேதி வாக்கு எண்ணிக்கை

வரும் 11ம் தேதி இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நாளை மறுநாளுடன் ஓய்கிறது. எனவே, தலைவர்களும், வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். 14ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in