

80வது சுதந்திர தினவிழா
80வது சுதந்திர தினம் நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் நாட்டுப்பற்றுடனும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.
காந்தி நினைவிடத்தில் மரியாதை
முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமரை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத், பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்புப் படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
வந்தே மாதரம் இசைப்பு
இதனையடுத்து, தேசியக் கொடியை ஏற்றும் இடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது, முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசியப் பாடலுக்கு மரியாதை அளித்தனர்.
தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர்
பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரதமருக்கு கேப்டன் சோனியா சிங் சவுகான் உதவினார்.
21 குண்டுகள் முழங்க தேசியக் கொடிக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது, விமானப் படை சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் இதழ்கள் தூவப்பட்டன.
சுதந்திர தின விழாவில், மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
=============