
மக்களவை - மசோதாக்கள் தாக்கல் :
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையவுள்ளது. 20வது நாளான இன்று காலை இரு அவைகளும் கூடிய நிலையில், எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு மக்களவை கூடியதும் இரண்டு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆன்லைன் பண விளையாட்டு தடை மசோதா :
ஆன்லைனில் பணத்தை வைத்து விளையாடும் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். விளையாடுபவர்கள் பணம் கட்டும் வகையில் உள்ள ஆன்லைன் விளையாட்டுகளை இந்த மசோதா தடை செய்கிறது.
மூன்று ஆண்டு சிறை, ஒரு கோடி அபராதம் :
* பணத்தை வைத்து ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தினால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
* ஆன்லைன் சூதாட்ட செயலிகள் தொடர்பான விளம்பரங்களுக்கும் இதன் மூலம் தடை விதிக்கப்படும்.
விளம்பரம் செய்தால் 2 ஆண்டு சிறை :
* இதையும் மீறி விளம்பரம் செய்தால் 2 ஆண்டு சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
சட்ட வரம்பில் விளையாட்டு தளங்கள் :
* ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்க மசோதா வழி செய்யும்.
* ஒழுங்குபடுத்தும் அமைப்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும். ஆன்லைன் சூதாட்டத்துக்கு இந்த மசோதா முடிவு கட்டும்.
===============